Designed by Iniyas LTD
இலங்கையில் மரணதண்டனையை நிறுத்தவேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள்
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களிற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 13 பேருக்கும் மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக நிறுத்தவேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. தேசிய போதைப்பொருள் ஒழிப்புவாரமான இவ்வாரத்தில் மரணதண்டனையை நிறைவேற்வதற்கான இரகசியமான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என ஊடகங்கள் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அச்சமடைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இவ்வாரம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால் 1976ம் ஆண்டின் பின்னர் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் தடவையாக அது காணப்படும் என சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. மரணதண்டனை குறித்த தனது சாதகமான வரலாற்றை இலங்கை கைவிடப்போகின்றது என வெளியாகும் அறிக்கைகளால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் [Biraj Patnaik]தெரிவித்துள்ளார்.
மரணதண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கட்டுப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது மனித உயிர்களை பாதுகாப்பது முக்கியமானதாக கருதப்படும் மனிதாபிமான சமூகத்தை கட்டியெழுப்புவதில் ஏற்பட்டுள்ள தோல்வியையே புலப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
பழிவாங்கும் நோக்கில் மேலும் மரணங்கள் இடம்பெறுவது இலங்கைக்கு தற்போது தேவையற்ற விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மரணதண்டனையை நிறைவேற்றும் நோக்கத்துடன் உள்ளார் என எங்களிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.