தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஈழத்தின் குரல் – தீபச்செல்வன் கவிதைகள் 

theepachelvan

01
எத்தனை தடவை
இந்த நகரத்தைச் சுற்றியிருக்கிறேன்?
இறுதித் தருணத்தில்
நகரம் என்னைச் சுழன்றது
நானாய் விரும்பி வெளியேறும்
பொழுது எதற்காக அழுதேன்?
சிதைக்கப்படும் இந்தப் புரதான நகரைப்
பிரிகையில் நான் கொல்லப்படுகிறேன்.
ஏன் இந்த நிலத்தை அங்குலம் அங்குலமாய்
நான் நேசிக்கிறேன்?
ஏன் இந்த நகரத்தின் சுவர்களை
மிக நெருங்கியிருந்து வாசிக்கிறேன்?
சுற்றிச் சுற்றி நாய்கள் குரைத்து
இரவை அதிரப் பண்ணிய நாட்களிலும்
நகரின் தெருக்களில் நான் பாடித் திரிந்தேன்
அபாயங்கள் கால்வாய்களில் ஒளிந்து
வருபவர்களை எதிர்பார்த்திருந்த காலத்திலும்
நான் வாழ்ந்திருந்தேன்.
வாழ்வு என்பது என்ன?
எப்பொழுது மரணம் சம்பவிக்கிறது?
கொலை பிரகடனப்படுத்தப்பட்ட நகரிலுள்ள
சிறிய அறைகூட
பெரிய உலகமாக விரிந்திருந்தது
அச்சம் நிர்மூலமாய் கவிழ்ந்திருந்த பொழுதிலும்
மரணம் வாசலில் பதுங்கிக்கிடந்த பொழுதிலும்
வாழ்வைப் பற்றிக் கனவுகள் வளர்த்தேன்.
02
பயங்கரங்களில் கலந்த பொழுதுகளையும்
துளிர்த்த வாழ்விலிருந்த வார்த்தைகளையும்
கொலை நகரின் மூடப்பட்ட அறையில் விட்டுவந்திருக்கிறேன்
ஒன்றையும் எடுத்துவரவில்லை
எல்லாம்
எனது அறையிலும் தறப்பாள் கூடார வீட்டிலும்
எனது நகரத்திலும் பெருநிலத்திலும்
நான் துரத்தப்படுவதை
நானாகவே வெளியேறிக் கொள்வதாக எழுதுகிறேன்
உயிர் தப்பித்து வந்த பொழுது
நான் மரணித்துப் போனேன்
வேருடன் பிடுங்கி நெருப்புக் கிண்ணத்தில்
நடப்பட்டிருக்கும் செடியாகக் கருகினேன்
எல்லாம் சுழன்று வீழ்ந்தன
அம்மாவைப் பிரியும்
சிறிய குழந்தையாய் தேம்பியழுதேன்
ஒரு குழந்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது
குழந்தைகள் மட்டும் அனுபவிக்கும் துயரங்களாய்க்
குழந்தைகள் மட்டும் பேசி முடியும் கதைகளாய்க்
குழந்தைகள் ஆசைப்படும் உலகமாய்
எல்லாமே நிராகரிக்கப்பட்ட குழந்தைகளைப்போல
தூக்கி வீசப்பட்டேன் எனது நிலத்திலிருந்து!
-தீபச்செல்வன்

தகவல் 01 : தீபச்செல்வன் 1983 , ஆக்டொபர் 24 ஆம் நாள் இலங்கையின் வடக்குப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரத்தில் பிறந்தவர் . அவரோடு உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன் மற்றும் ஒரு தங்கை . அண்ணன் போரில் வீரமரணமடைந்தார் . பின்னாளில் அந்த நிகழ்வே தீபச்செல்வனை மிக காத்திரமாக எழுதவும் இயங்கவும் வைத்தது .மிக இளம் வயதிலேயே எழுதத்தொடங்கிய தீபச்செல்வன் உலகம் முழுக்க விரவி இருக்கும் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான கவிஞர் . இவரின் கவிதைகளில் மிக வலிமையாக ஒலிக்கும் விடுதலையின் குரல் தான் இவரின் அகம் புறம் அனைத்தும்.

தகவல் 02: ஆரம்பக்கல்வியை கிளிநொச்சியில் உள்ள பாடசாலையிலும் , மற்றும் உயர் கல்வியை கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும் பயின்றவர் .புகழ்பெற்ற யாழ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் . அக்காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவ செயலாளராகவும் பணியாற்றியவர் . இவரின் செயல்பாடுகளால் கோபமடைந்த இலங்கை ராணுவம் இவர்களின் கல்லூரி முகப்பில் ஒரு நோட்டீஸ் ஒட்டியது . “உங்கள் செயல்பாடுகளை கைவிடாவிட்டால் பின்வருபவர்கள் கொல்லப்படுவீர்கள் ” என்றிருந்தது . அந்த பட்டியலில் முதல் பெயரே தீபச்செல்வனுடையது . ஆனால் தீபச்செல்வனின் செயல்பாடுகள் அதன் பிறகே கூடுதல் வேகம் பிடித்தன . யாழ் பல்கலை கழகத்தில் சிறப்பு விரிவுரையாளராகவும் பணி புரிந்திருக்கிறார்.

தகவல் 03 : போருக்கு பின்பு அங்கு நிலவிய சூழல் காரணமாக சென்னையில் தங்கியிருந்து சென்னை பல்கலை கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார் . பிறகு நெல்லையில் இருக்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில் எம்.பில் பட்டம் பெற்றார் . உயர் கல்வியை தமிழகத்தில் முடித்துவிட்டு தன் தாய் நிலத்துக்கு திரும்பினார்.

தகவல் 04 : இதுவரை அவர் எழுதி வெளியாகியிருக்கும் நூல்களின் விவரம் : பதுங்கு குழியில் பிறந்த குழந்தை (காலச்சுவடு பதிப்பகம்- 2008), ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம் (உயிர்மை பதிப்பகம்- 2009) , பாழ் நகரத்தின் பொழுது (காலச்சுவடு பதிப்பகம்- 2010), ஈழம் மக்களின் கனவு (தோழமை பதிப்பகம்-2010), பெருநிலம் (காலச்சுவடு பதிப்பகம்- 2011), ஈழம் போர்நிலம் (தோழமை பதிப்பகம் -2011), மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு(ஆழி பதிப்பகம்-2011), கூடார நிழல்
(உயிர்மை பதிப்பகம்-2012), கிளிநொச்சி போர்தின்ற நகரம்(எழுநா வெளியீடு-2013), எதற்கு ஈழம்? (தோழமை பதிப்பகம்-2013), PRAY FOR MY LAND
(நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-2013) , எனது குழந்தை பயங்கரவாதி ( விடியல் பதிப்பகம் -2014) , எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது? (உயிர்மை – 2014)

தகவல் 05 : தினக்குரல், உதயன், சுடரொளி, இருக்கிறம், உலகத் தமிழ் செய்திகள் போன்ற இலங்கை ஊடகங்களிலும் , தமிழகத்தில் உயிர்ம்மை , காலச்சுவடு ,தீராநதி , ஆனந்தவிகடன் , குமுதம் போன்ற இதழ்களில் தனது கவிதை மற்றும் கட்டுரை ஆக்கங்களை தொடர்ந்து செய்து வருகிறார் .இலங்கையில் அவருக்கு நிலவும் பல அச்சுறுத்தல்களுக்கு இடையே தான் அவர் இந்த செயல்பாடுகளை பங்களித்துவருகிறார்.

தகவல் 06 : 2010 ஆம் ஆண்டு “சிறந்த புகைப்பட ஊடகவியலாளர் விருது” பெற்றார் . பின்பு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நெருக்கடிச் சூழலில் செய்தித் தேடலுக்கான சிறந்த ஊடகவிலாயளருக்கான பேராசிரியர் கைலாசபதி விருது 2011 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது . அதன் பின் 2014 ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் இணைந்து வழங்கும் நெருக்கடி சூழலில் இயங்கியமைக்கான 2014 ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியலாளர் விருது பெற்றார் . இவை துடிப்புமிக்க இவரின் ஊடக பங்களிப்புக்கான ஒரு சான்று.

தகவல் 07 : கவிஞர் பௌத்த அய்யனார் “நேர்காணல்” என்னும் இதழை தமிழிகத்தில் கொண்டு வந்து கொண்டிருக்கிறார் . அது மிகவும் குறிப்பிடத்தக்க மிகவும் முக்கியமான ஒரு காலப்பதிவாகும் . அப்படி நேர்காணலின் ஆறாவது இதழ் 2013 ஆம் ஆண்டு வெளிவந்து . அந்த இதழ் “தீபச்செல்வன் சிறப்பிதழாக ” வெளிவந்தது . அந்த புத்தகத்தில் பௌத்த அய்யனார் தீபச்செல்வனுக்கு ” உலகத்தரமான ஒரு ஈழக்கவிஞன் ” என்று புகழாரம் சூட்டினார் . தீபச்செல்வனின் முழுமையான நேர்காணல் அதில் இடம்பெற்றிருந்தது . பலரையும் உலுக்கிய ஒரு பதிவு அது.

தகவல் 08 : நடிகர் நாசர் தாண்டவம் படத்தில் ஈழத் தமிழில் பேசி நடித்திருப்பார் . அவருக்கு அப்போது ஈழத் தமிழை சொல்லிக் கொடுத்து முழுக்க டப்பிங்கில் உடன் இருந்தவர் கவிஞர் தீபச்செல்வன் . இதை நினைவு வைத்து நாசர் இலங்கைக்கு சென்றிருந்த பொழுது கவிஞர் தீபச்செல்வனை சந்தித்து தன் பிரியங்களை பகிர்ந்து வந்தார் .
தகவல் 09: யாவும் வசப்படும் என்ற திரைப்படத்தில் பாடலும் எழுதியிருக்கிறார் தீபச்செல்வன் . காதல் பாட்டோ , பேத்தாஸ் பாடலோ அல்ல , அது ஒரு புரட்சிப்பாடல் . இவை தவிர சில குறும்படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறார் . அவையும் ஈழம் சார்ந்த படைப்புகளே.

தகவல் 10 : தீபச்செல்வன் எழுதிய முதல் கவிதை தொகுப்பான “பதுங்கு குழியில் பிறந்த குழந்தை” என்ற புத்தகத்துக்கு எழுதிய மதிப்புரையில் கவிஞர் தமிழ் நதி அவர்கள் பின்வருமாறு எழுதியிருந்தார் .
“தீபச்செல்வனின் கவிதைகள் ஒரு இனத்தின் வலி. காயத்திலிருந்து கொட்டும் குருதி. நெரிபடும் கழுத்திலிருந்து விக்கித்துக் கிளம்பும் ஓலம். கொலை படுகளத்தைப் பார்க்க விதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் கண்ணீர்த் துளிகள்.
கவித்துவம், சொற்கட்டு, செறிவு, படிமம் என்பதற்கப்பாலும் இருக்கிறது கவிதை. அது உண்மையை எழுதுவது. உண்மைக்காய் துடிப்பது. உண்மையைச் சார்ந்திருப்பது. அவ்வகையில் தீபச்செல்வனின் முதற்தொகுப்பே மிக முக்கிய தொகுப்பாக வெளி வந்திருக்கிறது. மிக இளைய வயதில் இப்படி எழுத முடிகிறதே என்று வியப்பதா அன்றேல் இப்படி எழுத நேர்ந்ததே என்று துக்கிப்பதா என்று தெரியவில்லை.”

தகவல் 11 :தீபச்செல்வன் உயர்கல்வி முடித்து தாயகம் திரும்ப எத்தனித்திருந்த பொழுது அவருடைய தமிழக நண்பர் ஒருவர் தீபச்செல்வனிடம் கேட்டார் “நீ எங்களோடு இருந்துவிட கூடாதா. உன்னை இலங்கைக்கு அனுப்ப அச்சமாக இருக்கிறது ” என்று . அதற்கு தீபச்செல்வன் அந்த நண்பருக்கு சொன்ன பதில் “இல்லை . நான் இங்கே சுற்றுலாவுக்கு வரவில்லை . நான் அங்கே தான் போகவேண்டும் . ஒருவேளை நீங்கள் அங்குவந்தாலும் உங்களால் அங்கேயே இருக்க முடியாது . நீங்கள் திரும்ப இங்கு வரத் தான் நினைப்பீர்கள் . என் அம்மாவும் தங்கையும் அங்கே கிளிநொச்சியில் இருக்கிறார்கள் இல்லையா …அது தான் என்னுடைய நிலம் . எனக்கு வாழ்வோ மரணமோ அவை என் நிலத்தில் தான் நிகழ வேண்டும்” .
தன் தாய் நிலத்தை நேசிக்கும் தீபச்செல்வனின் கவிதைகள் உண்மைக்கு வெகு அருகில் இருப்பவை . வெறும் சொற்களால் நிரம்பியது அல்ல தீபச்செல்வனின் கவிதைகள். அவை ஈழத்தின் முகம். ஈழத்தின் குருதி. ஈழத்தின் குரல்.

-க. உதயகுமார்

Comments
Loading...