தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐ.நா.மனித உரிமை பேரவையின் இன்றைய அமர்வில் ஶ்ரீலங்கா தொடர்பான விவாதம்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் ஶ்ரீலங்கா தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.

ஶ்ரீலங்கா தொடர்பான விவாதம் பல்வேறு நாடுகளின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம்  நடைபெறவுள்ளது.

ஜெனிவா நேரப்படி  இன்று காலை 9 மணியளவில் ஶ்ரீலங்கா தொடர்பான விவகாரம் எடுக்கப்படவுள்ளது.

முதலில் ஶ்ரீலங்கா தொடர்பான அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட்  அம்மையாரால்  உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்ட பின்னர் அது மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

இதன்போது உரையாற்றவுள்ள கனடா பிரிட்டன் மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் ஶ்ரீலங்கா விவகாரத்தில் அழுத்தங்களைப் பிரயோகிப்பார்கள் என்றும்  எதிர்பார்க்கப்படுகின்றது.

அதோடு  சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இன்றைய ஶ்ரீலங்கா குறித்த விவாதத்துக்கு தயாராகி வருகின்றனர்.

அந்தவகையில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சர்வதேச மன்னிப்புச்சபை உள்ளிட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதன்போது உரையாற்றவுள்ளனர்.

கடந்த 10 வருடகாலத்தில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் ஶ்ரீலங்கா போதுமான முன்னேற்றத்தை வெளிக்காட்டவில்லை என  சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள்  இதன்போது  அதிருப்தி தெரிவிக்கவுள்ளனர்.

அத்துடன் சர்வதேச நீதிபதிகளின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தவுள்ளனர்.

இதேவேளை  ஶ்ரீலங்காவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கான பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டுமென்ற கோரிக்கை இன்றைய தினம் வலுவான முறையில் சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் வலியுறுத்தப்படவுள்ளது.

ஶ்ரீலங்காவின்ன் சார்பிலும் சிங்கள அரசாங்கத்தின் தூதுக்குழுவினர் இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

கடந்தமாதம் 25 ஆம்திகதி ஆரம்பமான ஐ.நா. மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 25 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது ஶ்ரீலங்கா குறித்த அறிக்கையை உத்தியோகபூர்வமாக வெ ளியிடவுள்ள நிலையிலும் அவர் ஏற்கனவே அதனை வெ ளியிட்டுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அதில் மிகவும் காரசாரமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்படவேண்டும் ஐ.நா. மனித உரிமை அலுவலகம் இலங்கையில் நிறுவப்படவேண்டும் என்பது உள்ளிட்ட பல பரிந்துரைகள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லட்டின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...