Designed by Iniyas LTD
ஐகோர்ட் வளாகத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்
விவாகரத்து வழக்கு இழுத்தடிக்கப்படுவதால் மனவேதனை அடைந்த இளம் பெண் ஒருவர் ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண்ணின் நிலை கண்டு இரக்கம் கொண்ட போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் மன்னித்துவிட முடிவு செய்துள்ளனர். விவாகரத்து சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 34). இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.
இவர்களது விவாகரத்து வழக்கு ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள குடும்பநல கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வருவதால், தனலட்சுமி மன வேதனை அடைந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று குடும்பநல கோர்ட்டுக்கு அவர் வந்திருந்தார். வழக்கம் போல் வழக்கு விசாரணை வேறு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான தனலட்சுமி, குடும்பநல கோர்ட்டுக்கு பின்னால் உள்ள, பல அடுக்குகளை கொண்ட மாற்றுமுறை சமரச தீர்வு மையத்தின் கட்டிடத்துக்குள் விரைந்து சென்றார்.
அந்த கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்ற அவர், அங்கிருந்து கீழே குதிக்கப்போவதாக மிரட்டினார். இதைக்கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அலறினர். அந்த கட்டிடத்துக்கு மிக அருகில் தீயணைப்படை அலுவலகம் உள்ளதால், அங்கிருந்த வீரர்கள் மிகப்பெரிய வலையை தூக்கிக்கொண்டு விரைந்து வந்தனர். தனலட்சுமி கீழே குதித்தாலும், படுகாயமடையாமல் இருக்க, அந்த வலையை விரித்து, தூக்கி பிடித்தனர். இதற்கிடையில், ஐகோர்ட்டு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார், மொட்டை மாடிக்கு விரைந்து சென்றனர். தனலட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே அருகில் சென்று, அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை பத்திரமாக மொட்டை மாடியில் இருந்து கீழே அழைத்து வந்தனர்.
பின்னர், தனலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தன்னுடைய விவாகரத்து வழக்கு எந்த முன்னேற்றம் இல்லாமல் உள்ளது என்றும், தன் கணவர் தரப்பில் வழக்கை இழுத்தடிப்பதாகவும், அதனால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறினார். இதையடுத்து அவர் மீது இரக்கப்பட்ட போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், மன்னித்துவிட முடிவு செய்தனர். பின்னர், தனலட்சுமியின் பெற்றோரை அழைத்து, அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் ஏறி பெண் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.