தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான புதிய அணிகள் தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட்  தொடரில்  அடுத்த  இரண்டு ஆண்டுகளுக்கான புதியஅணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்களின் தேர்வு மும்பையில் இன்று செவ்வாய்க்கிழமை (15/12/2015) நடைபெற உள்ளது. இதில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியில் இடம்பிடிப்பர் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.IPL

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் இந்தியாவில் கடந்த  2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  இதில் கடந்த  2013-ஆம் ஆண்டு நடைபெற்ற 6-வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் முன்னாள் உரிமையாளர் குருநாத் மெய்யப்பன்,  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ்குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த வழக்கில்,  உச்சநீதிமன்றம் சென்னை,  ராஜஸ்தான் அணிகளுக்கு  2 ஆண்டுகள் தடைவிதித்து உத்தரவிட்டது.  கிரிக்கெட் விளையாட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்திய குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு கிரிக்கெட் தொடர்பான விஷயங்களில் பங்கேற்க ஆயுட்கால தடைவிதிக்கப்பட்டது.

இதனையடுத்து, சென்னை, ராஜஸ்தான்அணிகளுக்குப்பதிலாக, புனே, ராஜ்கோட்அணிகள் 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் புதிதாக சேர்த்து பிசிசிஐ முடிவு செய்தது. புனே அணியை 16  கோடி  ரூபாய்க்கு  சஞ்சய்  கோயாங்-யை  உரிமையாளராகக் கொண்ட நியூரைஸிங் நிறுவனமும், ராஜ்கோட் அணியை  10 கோடி ரூபாய்க்கு இண்டெக்ஸ் நிறுவனமும் ஏலத்தில் வாங்கியது.

இதனையடுத்து புதிய இரண்டு அணிகளின் வீரர்களுக்கான முதல் கட்ட தேர்வு இன்று மும்பையில் நடைபெற உள்ளது.  இதில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளிலிருந்து சிறந்த  5 வீரர்களை நேரடியாக தேர்வு செய்ய இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புனே அணியின் நிறுவனமான நியூரைசிங்தான் முதலில் வீரரை தேர்வு செய்யும் என ஐ.பி.எல். நிர்வாகம் கூறியுள்ளதால்,  அந்த அணி தோனியை தங்கள் பக்கம் இழுப்பார்கள் என தெரிகிறது.

இதேபோல சென்னை அணியின் முன்னணி வீரர்களான அஸ்வின்,  மெகல்லம், ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரும்,  ராஜஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான ஷேன்வாட்ஸன்,  ரஹானே, ஸ்டீவன்ஸ்மித்,  ஸ்டூவர்ட்பின்னி, சஞ்சுசாம்ஸன் உள்ளிட்ட வீரர்களும் புதிய ஐபிஎல் அணிகளின் முதல் கட்ட ஏலத்தில் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இரண்டாம் இணைப்பு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டு அணிகளுக்கான வீரர்கள் தேர்வு மும்பையில் தொடங்கியது. முதல் வீரராக மகேந்திர சிங் தோனியை, புனே அணி 12.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

ஊழல் புகாரில் சிக்கிய சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்குப் பதிலாக, புனே, ராஜ்கோட் அணிகளை ஐ.பி.எல் போட்டிகளில் சேர்க்க பிசிசிஐ முடிவெடுத்தது. இதனையடுத்து புனே அணியை 16 கோடி ரூபாய்க்கு சஞ்சய் கோயாங்-யை உரிமையாளராகக் கொண்ட நியூ ரைஸிங் நிறுவனமும், ராஜ்கோட் அணியை 10 கோடி ரூபாய்க்கு இண்டெக்ஸ் நிறுவனமும் ஏலத்தில் வாங்கின.

அதன் தொடர்ச்சியாக புதிய இரண்டு அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில், தோனி 12.5 கோடி ரூபாய்க்கு புனே அணி ஏலத்தில் எடுத்தது. அதனைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா 12.5 கோடி ரூபாய்க்கு ராஜ்கோட் அணி ஏலத்தில் எடுத்தது. ஒவ்வொரு அணியும் தலா ஐந்து வீரர்கள் ஏலத்தில் எடுத்த பின்னர் முதல் கட்ட ஏலமானது முடிவுக்கு வந்தது.

புனே அணிக்காக தோனி, ரஹானே, அஸ்வின், ஸ்மித் மற்றும் டூ பிளஸ்சி ஆகியோரும், ராஜ்கோட் அணிக்காக ரெய்னா, ஜடேஜா, மெக்கல்லம், பாக்னர் மற்றும் ப்ராவோ ஆகியோரும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது கட்ட ஏலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி பெங்களூரூவில் நடைபெற உள்ளது.

Comments
Loading...