தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒன்று பட்டு தமிழினப்பரம்பலை அதிகரிக்க வேண்டும்.

images

தமிழர் தாயகத்தில்   வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்ததற்கும்  குறைவடைந்து செல்வதற்கும் முழுப்பொறுப்பு சிங்களப்படைகளே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சிங்களப்படையின் அடக்கு முறைகளும்  அச்சுறுத்தல்களும் பாதுகாப்பு தேவைக்கென தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டேயுள்ளது.

இதனால் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் நாட்டுக்குள் வர விரும்பவில்லை.
எஞ்சியிருப்பவர்களும் நாட்டைவிட்டு தற்போதும் பலர் வெளியேறி வருகின்றனர். இவற்றுக்கெல்லாம் சிங்களப்படையினரின்நடவடிக்கைகளே முழுக்காரணம்.

நாட்டை விட்டு யுத்தம் காரணமாக அகதியாக சென்ற மக்களின் காணிகளை சிங்களப்படையினர் உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி வைத்துக் கொண்டு மக்களை மீள்குடியேற விடாமல் தடுத்துவருதல் போன்ற பல காரணங்களினால் தமிழினத்தின் பரம்பல் வடக்கு கிழக்கில் திட்டமிட்டு குறைக்கப்பட்டு வருகின்றது.

அச்சுறுத்தல்கள் காரணமாக தமது சொந்த பூமியை விட்டு வெளியேறிவர்கள் வடக்கிற்கு வருவதற்கு தடையாக இருப்பதாலும் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் வாக்காளர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முழுப்பொறுப்பு சிங்களப்படையினர் தான்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் வடக்கில் முன்பு இருந்ததைவிட அரைவாசியாக குறைவடைந்து விட்டது. எனவே எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய நிலையில் எமது குடிப்பரம்பல் உள்ளது. தமிழ்மக்கள் எங்குயிருந்தாலும் ஒன்று பட்டு தமிழினப்பரம்பலை அதிகரிக்க உதவி செய்வதோடு வடக்கு கிழக்கில் வாக்குப்பலத்தை அதிகரிக்கவும் செய்யவேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments
Loading...