Designed by Iniyas LTD
ஓய்வுபெற்றவர்களுக்கு இராஜதந்திரப் பதவி கிடையாது! ரவி கருணாநாயக்க
இராஜதந்திர சேவையில் கல்விப் புலமை மற்றும் ஆற்றல் கொண்டவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்படும் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் ரவி கருணாநாயக்க, நேற்று முதல் முறையாக மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
இதன் போதே அவர் இராஜதந்திர சேவையில் கல்விப் புலமை மற்றும் ஆற்றல் கொண்டவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்படும் என்று மகாநாயக்க தேரரிடம் உறுதியளித்துள்ளார்.
“ஓய்வு பெற்றவர்கள் இராஜதந்திர சேவையில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள்.
சிறிலங்காவின் தூதுவர்கள் வெளிநாடுகளில் நாட்டின் பெயரைக் கட்டியெழுப்ப வேண்டும். வெளிநாடுகளில் நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள், அதற்கு ஏற்றவர்களாக இருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் சிறிலங்காவின் இராஜதந்திரிகளாக 60 பேருக்கு மேல் உள்ளனர் அவர்களில் பலர் தகுதியற்றவர்கள். அவர்கள் திருப்பி அழைக்கப்படுவார்கள்.
முன்னர் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர, தனது பதவிக் காலத்தில், நாட்டுக்காக மிக முக்கியமான பங்கை ஆற்றியிருக்கிறார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.