தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சியில் கடையடைப்புக்கு கோரிக்கை!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் தொடங்கி ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு தாங்கள் கடைகளை மூடாமல் ஆதரவு தருகின்றோம் என் கிளிநொச்சி வர்த்தகர்களால் அறியத்தரப்பட்டுள்ளது.
முன்னதாக வர்த்தகர்கள் கடைகளை பூட்டி தமக்கு ஆதரவு தரும்படி ஊடகங்களினூடாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
ஆயினும் கிளிநொச்சி சந்தை வர்த்தக சங்கத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுக்கு ஆதரவு வழங்க சொல்லி கடிதம் தரவில்லையென தெரிவித்துள்ளதுடன் தாங்கள் கடைகளை மூடாமல் ஆதரவு தருகின்றோம் என் கிளிநொச்சி வர்த்தகர்களால் அறியத்தரப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டம் ஒருவருடத்தை எட்டியுள்ள நிலையில் தமக்கு ஆதரவாக கடையடைப்பு போராட்டமொன்றிற்கு வர்த்தகர்களிற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் ஆரம்பமாகிய பின்னர் குடும்பங்கள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களிடம் அமர்வுகளை புறக்கணிக்கவிடுக்கப்பட்ட கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை.
இந்நிலையில் தமது போராட்டத்தின் ஒரு வருட பூர்த்திக்கு வடக்கு கிழக்கை சேர்ந்த வர்த்தகர்கள் கடைகளை பூட்டி ஆதரவு தரும்படி கேட்டுள்ளார்கள்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவானது தென்னிலங்கையில் அரசியல் மாற்றத்திற்கு வழிகோலியுள்ளது. எனினும், அதனால் தமது பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்போவதில்லையென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தமது பிள்ளைகளை ஒப்படைக்க முன்வந்தால், யாராக இருந்தாலும் அவர்கள் கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகங்களை மன்னிக்கத் தயாராக உள்ளதாக கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் லீலாவதி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது, எதிர்வரும் 20ஆம் திகதி ஒரு வருடத்தை எட்டவுள்ளது. அதனை நினைவுறுத்தி நாளை செவ்வாய்க்கிழமை பாரிய அமைதிப் போராட்டமொன்றை அவர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.
அரசாங்கத்தை நம்பி காணாமல் ஆக்கப்பட்டோர் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள லீலாவதி, தமது குரலை சர்வதேசத்திற்கு ஒலிக்கச் செய்யும் வகையில் இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இப்போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி தமது பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்ல வேண்டுமென அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
மேலும், காணாமல் போனோர் விடயத்தில் தற்போதைய அரசாங்கத்தில் போராடுவதற்கான உரிமை மாத்திரமே கிடைக்கப்பெறுள்ளதாக தெரிவித்த லீலாவதி, அதனைத் தவிர வேறெந்த நன்மைகளும் கிடைக்கவில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. அமர்வில் கலந்துகொள்ள செல்லும் அரசியல் தலைவர்களும் சமூக அமைப்புகளின் செயற்பாட்டாளர்களும் மனசாட்சியுடன் செயற்பட்டு, தமக்காக குரல்கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments
Loading...