தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொடூரமான வன்முறைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறை தலைவரை விசாரிக்குமாறு ஐ நா விடம் கோரிக்கை!

downloadஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறையுடன் தொடர்புடைய பணியாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான வன்முறைகள் தொடர்பில் சிறிலங்காவின் தேசிய புலனாய்வுத்துறையின் தலைமை அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் என எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பும், இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பும், சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா வின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் 59 ஆவது கூட்டத்தொடரில் இன்றும், நாளையும் சிறிலங்கா தொடர்பில் ஆராயப்பட்டுவரும் நிலையிலேயே, ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்துவரும் இந்த அமைப்புக்கள் இரண்டும் இணைந்து இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அவசர அறிக்கையில் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றன.

இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற காலப்பகுதியான 2008 மார்ச் மாதம் முதல் 2009 யூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் சீ.ஐ.டி என்ற குற்றப்புலனாய்வு பிரிவிற்கும், ரீ.ஐ.டி என்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கும் தற்போதைய தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியாக கடமையாற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிசே தலைமை அதிகாரியாக கடமையாற்றியிருந்ததாக ஊடகவியலாளர் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

இதனால் போரின் இறுதிக்கட்டத்தில் பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இயங்கும் சீ.ஐ.டி மற்றும் ரி.ஐ.டி யினரால் அரங்கேற்றப்பட்ட சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிசே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சிசிர மெண்டிசின் கீழ் இருந்த சீ.ஐ.டி மற்றும் ரீ.ஐ.டி யினரால் சிதிதிரவதைகளுக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு மேலதிகமாக ஊடகத்துறையுடன் தொடர்புடையவர்களை கடத்திச் சென்றமை, கைதுசெய்தமை, தடுத்துவைத்து கொடூரமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தியமை ஆகிய கொடூரங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் விடுதலையானவுடன் மீண்டும் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக பெரும்பாலானவர்கள் நாட்டை விட்டே வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸாநாயகம் மற்றும் எழுத்தாளரும், பதிப்பாளருமான வீ.ஜசீகரன் மற்றும் அவரது மனைவி வீ.வளர்மதி, ஊடகவியலாளர் கே.விஜேசிங்க ஆகியோர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மிகவும் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளானவர்களில் மிகவும் முக்கியமானவர்கள்.

இவர்களைத் தவிர தமிழ் மருத்துவர்கள் நான்கு பேருடன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த மருத்துவர் துரைராசா வரதராஜா ஆகியோரும் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகியிருந்தனர்.

ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற கொடூரங்களை ஊடகங்கள் ஊடாக வெளி உலகத்திற்கு தெரியப்படுத்திய ஒரே காரணத்திற்காகவே மருத்துவர்களான இவர்கள் துன்புறுது்தப்பட்டதாக ஆர்.எஸ்.எப் மற்றும் ஜே.டி.எஸ் என்ற ஊடகவியலாளர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சீ.ஐ.டி. மற்றும் ரீ.ஐ.டி ஆகிய பொலிஸ் பிரிவுகளினால் இழைக்கப்பட்ட கொடூரங்கள் தொடர்பில் அப்போது அந்தப் பிரிவுகளுக்கு பொறுப்பாக இருந்த தற்போதைய தேசிய புலனாய்வுத்துறையின் தலைமை அதிகாரி சிசிர மெண்டிசிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா வின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ள ஆர்.எஸ்.எப் மற்றும் ஜே.டி.எஸ் என்ற ஊடகவியலாளர் அமைப்புக்கள், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை முழுமையாக தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.  

தனது மேற்பார்வையின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் மற்றும் தகவல் வழங்கியவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்று தேசிய புலனாய்வுத்துறையின் தலைமை அதிகாரி சிசிர மெண்டிசிற்கு கூற முடியாது என்றும் அந்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை தடுப்பில் இருந்த போது மிகவும் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்களும், ஊடகப் பணியாளர்களும், விடுதலை செய்யப்பட்ட பின்னரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்தது தொடர்பிலான சகல விபரங்களும் தம்மிடம் இருப்பதாகவும் ஆர்.எஸ்.எப் மற்றும் ஜே.டி.எஸ் என்ற ஊடகவியலாளர் அமைப்புக்கள் தமது அறிக்கையில் கோடிட்டுக் காட்டியுள்ளன.

இதனால் சிறிலங்காவவற்குள் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டுமானால், ஊடகத்துறைக்கு எதிராக செயற்பட்ட தேசிய புலனாய்வுத்துறையின் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸை விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய கடப்பாடு ஐ.நா வின் சித்திரவதைக்கு எதிரான குழுவிற்கு இருப்பதாகவும் ஆர்.எஸ்.எப் இன் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய அலுவலக தலைமை அதிகாரி பெஞ்சமின் இஸ்மயில தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வுத்துறையின் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ் சீ.ஐ.டி மற்றும் ரீ.ஐ.டி ஆகியவற்றுக்கு பொறுப்பாக இருந்தபோது அரங்கேற்றிய கொடூரங்கள் தொடர்பான விபரமான பட்டியலொன்றை ஐ.ரி.ஜே.பி என்ற சர்வதேச நீதிக்கும், உண்மைக்குமான செயற்திட்டம், ஐக்கிய நாடுகள் சித்திரவதைகளுக்கான குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரவதைகள் உட்பட கொடூரங்களை மனிதாபிமானமற்ற மற்றும் வெட்கக் கேடான நடவடிக்கைகள் என்றும் ஏற்றுக்கொள்வது மற்றும் இவ்வாறான கொடூரங்களை தண்டனைகளாக பயன்படுத்துவதற்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள 159 நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று. இதற்கமைய இந்த உடன்படிக்கையை அமுல்படுத்தியுள்ளமை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜெனீவாவில் கடந்த ஏழாம் திகதி ஆரம்பமாக ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் 59 ஆவது கூட்டத் தொடரில், சிறிலங்கா தொடர்பில் ஆராயும் போது, சிறிலங்காவின் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள தேசிய புலனாய்வுத்துறையின் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ் தொடர்புபட்ட கொடூரங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டியது இன்றியமையாதது என ஆர்.எஸ்.எப் மற்றும் ஜே.டி.எஸ் ஆகிய ஊடகவியலாளர் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

Comments
Loading...