Designed by Iniyas LTD
கொத்துக்குண்டு பக்ஷக்களும் கிளாஸ்டர் சிறிசேனக்களும்!
தற்போது, ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடரின்போது கொத்துக் குண்டுகள் தொடர்பில் உரிய விசாரணை வேண்டுமென்று தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஊடகமான தி கார்டியன், ஸ்ரீலங்கா அரசு இறுதி யுத்தத்தில் கொத்துக் குண்டுகளை பாவித்தது என்று தெரிவித்து, அதற்கான ஆதாரப் புகைப்படங்களை வெளியிட்டிருப்பது ஸ்ரீலங்கா அரசுக்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
கொத்துக் குண்டுகளை பாவிப்பது என்பது சட்டவிரோதமானது என்பதை சர்வதேச மனித உரிமைவாதிகள் தெரிவித்து வருகின்றனர். வகைதொகையற்று, வேறுபாடற்று அழிப்பதற்காகவே கொத்துக்குண்டுகள் பாவிக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில், மக்களுடன் இருந்த விடுதலைப் புலிகளை இத்தகைய குண்டுகளின் ஊடாக அழிப்பது என்பது மக்களை அழிப்பதே. எனவே இவை இனப்படுகொலை சார்ந்த செயலாக, மனித உரிமை மீறலாக கருதப்படுகிறது.
ஸ்ரீலங்கா அரசாங்கம், கொத்துக் குண்டுகளை வீசி தமிழ் ஈழ மக்களை இனப்படுகொலை புரிந்த செயல் ஏற்கனவே, ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் இதனை சர்வதேச நாடுகளோ, ஐ.நா போன்ற அமைப்புக்களோ கண்டுகொள்ளாமல் இருந்தன. இனப்படுகொலை யுத்தத்தில் சர்வதேச நாடுகள் பலவும் ஒன்றை ஒன்றை போட்டி போட்டுக் கொண்டு ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவு அளித்திருந்தது. எனவே தமிழீழர்கள்மீதுவீசியெறியப்பட்ட இந்தக் கொத்துக் குண்டுகளுக்கும் அவர்களும் பொறுப்புடையவர்களே.
தி கார்டியன் கொத்துக் குண்டுகள் தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டிருப்பது ஸ்ரீலங்கா அரசுக்கும் சில சர்வதேச நாடுகளுக்கும் சற்று அதிர்ச்சிதான். கண்ணி வெடிகளை மீட்கும் தொண்டு நிறுவன பணியாளர் ஒருவர் வன்னி போர் களத்தில் வெடித்துச் சிதறிய கொத்துக் குண்டுகளின் பாகங்கள் கிடப்பதை படம் பிடித்துள்ளார். இவரே தி கார்டியனுக்கு இனப்படுகொலையின் கொத்துக் குண்டுகள் தொடர்பான ஆதாரங்களை வெளியிட்ட மூலம் ஆவார்.
கொத்துக் குண்டுகளை பயன்படுத்தவில்லை என்று ஸ்ரீலங்கா பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி முதலில் தெரிவித்திருந்தார். தாம் யுத்தத்தில் கொத்துக் குண்டு பயன்படுத்தவில்லை என்று கூறிய அமைச்சர் ராஜித, கண்ணிவெடி மீட்பு பணியாளர் ஒருவர் இவ்வாறு படங்களை பிடித்து வெளியிடுவது முறையற்றது,பிழையானது, தண்டணைக்குரியது என்றார். அப்படி என்றால் கொத்துக் குண்டுகளை நாம் பயன்படுத்தினோம். அதைப் படம் பிடித்து தி கார்டியன் போன்ற ஊடகத்திற்கு கொடுப்பதுதான் தவறு என்கிறார் அமைச்சர்.
அமைச்சரின் வாக்மூலுத்தின்படி கொத்துக் குண்டை பயன்படுத்தியது தவறில்லை என்பதை சொல்லாமல் சொல்கிறார். இதுவே அவதானத்திற்குரியது.
அத்துடன், இனப்படுகொலையாளி, போர்க்குற்றவாளி, கோத்தபாய ராஜபக்ச தமது பதவிக் காலத்தில் கொத்துக் குண்டு பயன்படுத்தவில்லை என்கிறார். இவர் அடுத்த புளுகர். முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முனைகிறார். அமைச்சர் ராஜிதவைப் போலவும், இப்போதைய பாதுகாப்புச் செலாயளர் கருணாசேன ஹெட்டியாராட்சி போலவும் செயற்பட பாக்கிறார். அப்படி என்றால் மைத்திரியின் ஆட்சியில் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்று கோத்தபாய ராஜபக்ச சொல்கிறாரோ? அல்லது சந்திரிக்காவின் காலத்தில் வீசப்பட்டதென்கிறாரோ?
இன்னும் சில காலத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை எமது காலத்தில் இடம்பெறவில்லை என்றும் கோத்தபாய ராஜபக்சக்கள் சொல்லுவார்கள். கொத்துக் குண்டுகள் யார் மீது வீசப்பட்டன? தமிழ் ஈழ மக்கள்மீது. இதனால்தான் மாறி மாறி சிங்கள அரசை ஆண்டவர்களும் ஆள்பவர்களும் மறுக்கிறார்கள். ஒருவரை ஒருவர் பாதுகாக்கிறார்கள். கொத்துக் குண்டு போரில் பயன்படுத்தவில்லை என்று இப்போதைய அரசு கூறி முன்னைய அரசில் இருந்த கொலையாளிகளையும் பாதுகாக்கிறார்கள்.
ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விட்டது. அது தமிழ் மக்களுக்கு பாலும் தேனும் பாய்ச்சுகிறது என்பவர்களே, இதைத்தான் கவனிக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு ஸ்ரீலங்கா இனவாத அரசு நடத்திய இனப்படுகொலை யுத்தத்தில் யாவரும் ஒன்றே. அவர்கள் கொத்துக்குண்டு பக்சேக்களும் கிளாஸ்டர் சிறிசேனக்களும்! தமிழ் ஈழ இனத்தை அழிப்பவர்களே.
தமிழவன்,
செண்கம்.
29.06.2016
