தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் – செல்வராஜா கஜேந்திரன் …

அண்மையில் இந்தியா சென்றிருந்த ஈபிடிபி கட்சித்தலைவர் டக்ளஸ் தேவானந்தா இந்திய ஊடங்களிற்கு கருத்துரைத்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஒரு விச ஜந்து என கூறியிருந்தார்.

இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு  குறிப்பிட்டதற்காக தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என செல்வராஜா கஜேந்திரன் கூறியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே  கஜேந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

அதோடு தமிழ் மக்களின் அழிவிற்கு டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களது  காட்டிக்கொடுப்புக்களே காரணம் என்றும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளை காட்டிக்கொடுத்தும் மூடிமறைத்தும் வந்த  டக்ளஸ் தேவானந்தா ,  விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிக் கதைக்க டக்ளஸ் தேவானந்தா அருகதையற்றவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தில் ஒன்றரை இலட்சம் மக்கள் சிங்களப் படைகளால் கொன்று குவிக்கப்பட்டதற்கும் தமிழ் மக்களின் கவசங்களாக இருந்த விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதற்கும்,

டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களது துணை இராணுவக் குழுக்களின் காட்டிக்கொடுப்புக்களே பிரதான காரணிகளாக இருந்ததை அவர் இதன்போது நினைவுபடுத்தியுள்ளார்.

மேலும் விடுதலைப் புலிகள் தமிழ்மக்களது உரிமைக்காக தங்களது உயிர்களைத் தியாகம் செய்து போராடியவர்கள். அவர்களைப் பற்றிக் கதைப்பதற்கு அரசபடைகளோடு துணைநின்ற துணை இராணுவக் குழுக்களான அடிமைகளுக்கு எந்த அருகதையும் இல்லை என்றும் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

 

Comments
Loading...