தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டர்பன் நகரில் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்காவின் மொசாம்பிக், தென் ஆப்பிரிக்கா, தான்சானியா, கென்யா ஆகிய நாடுகளுக்கான 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  பயணத்தின் முதற்கட்டமாக நேற்று ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மபுடோ நகரில் உள்ள கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மையத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள மாணவர்களிடையே கலந்துரையாடினார்.  Modi-Zuma

பின்னர், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மையத்திற்கு பிரதமர் 4 பேருந்துகளை இந்தியா சார்பில் வழங்கினார். மேலும், இந்தியா-மொசாம்பிக் நாடுகளுக்கு இடையே உள்நாட்டு பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.  இதையடுத்து, சுற்றுப்பயணத்தின் இரண்டாம்கட்டமாக பிரிட்டோரியா நகருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ந்கோனா-மஷாபானே, சிறுதொழில்கள் துறை மந்திரி லின்டிவே ஸுலு ஆகியோர் பிரிட்டோரியா விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அன்புடன் சிகப்பு கம்பள வரவேற்பு அளித்து வரவேற்றனர். தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸுமாவுடன் இருநாடுகளின் நட்புறவை பலப்படுத்துவது தொடர்பாக தற்போது மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முன்னதாக, அதிபர் மாளிகையில் அவருக்கு ராணுவ மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையின்போது தென்னாப்பிரிக்கா-இந்தியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை அதிபர் சிரில் ரமபோஸா மற்றும் அங்குள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்துப் பேசும் மோடி, இந்தியா-ஆப்பிரிக்கா தொழிலதிபர்கள் பங்கேற்கும் கருத்தரங்கில் சிறப்புரையாற்றுகிறார்.  இன்றுமாலை ஜோகனஸ்பர்க் நகரில் வாழும் இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றும் அவர், மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா ஆகியோர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறையை பார்வையிடுவார். டர்பன் நகரில் நடைபெறும் மேலும் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, நாளை தான்சானியா நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார்.

Comments
Loading...