Designed by Iniyas LTD
டெசோவும் கருணாநிதியின் கபட நாடகமும்! பாகம் மூன்று
காலத்தால் மறக்கக்கூடியவர்களா தமிழர்கள்?
தமிழர்கள் காலத்தால் மறக்கக்கூடியவர்கள் என்ற வலுவான நம்பிக்கை தமிழக அரசியல்வாதிகள் அனைவருக்குமே உண்டு. அதிலும் பெரிய நம்பிக்கை, கருணாநிதிக்கு உண்டு. அந்த நம்பிக்கையில் இப்போதெல்லாம் இராஜாத்தி அம்மாள் தனது மனைவி எனத்துணிந்து கூறிவருகிறார். சில உண்மைகள் அப்பாவியான மகளை பாதித்துவிடுமே என்றுதான் இது வரை தமிழர்கள் வாய் திறக்கவில்லை. 1968 இல் சட்டமன்ற நடவடிக்கைகளினூடே அன்றைய எதிர்க்கட்சி தலைவராயிருந்த திரு.கருத்திருமன் அவர்கள் தொடர்ந்து கனிமொழி என்ற ஒரு குழந்தையின் தந்தையாக திரு.கருணாநிதி அவர்கள் பெயர் மருத்துவமனையில் பதிவாகியுள்ளதே அவ்வாறாயின் பதியப்பட்டுள்ள அக்குழந்தையின் தாய் தர்மாம்பாள் என்பவர் யார்?என்ற ஒரு கேள்வியினை விடுத்துக்கொண்டே யிருந்தார்.
அதற்கு திரு கருணாநிதி அவர்கள் பதிலை தவிர்த்துக்கொண்டு இருந்தார். என்றாலும் ஒரு கட்டத்தில் சொல்ல வேண்டியதாயிற்று. என்ன சொன்னார் தெரியுமா? தர்மாம்பாள் தனது பத்தினியல்ல; அவள் தன மகள் கனிமொழியின் தாய் என்றார். யார் அந்த தர்மாம்பாள்? அந்த தர்மாம்பாள்தானே இன்றைக்கிருக்கும் இராசாத்தி அம்மாள்? தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையை அம்பலப்படுத்துவதோ, இழிவுபடுத்துவதோ எமது நோக்கமல்ல. கருணாநிதி தமிழகத்தின் மூத்ததலைவர். தமிழகமுதல்வராய் இருந்தவர், அமைச்சராக இருந்தபோது இருதாரப் பிரச்சனையால் தனது பதவி பறிபோய்விடக்கூடாது என்று இப்பதிலை சொல்லியிருந்தார் என்பதை தமிழர்கள் நினைவில் வைத்துக்கொள்வார்கள். எதையும் மறந்துவிடமாட்டார்கள்.
கருணாநிதி எதிரியா?துரோகியா?
திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் அமெரிக்க மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காலமது! தமிழக மக்கள் தாங்கள் உயிராக நேசித்த தலைவனின் தேறுதலுக்கும்,திரும்பி வந்து ஆட்சியை ஏற்பதற்கும் தமிழகத்தில் வேண்டாத தெய்வங்கள் இல்லை. 1967இல் காங்கிரஸை தி.மு.க தோற்கடிக்க, குண்டடிப்பட்ட கட்டுக்களுடன் மருத்துவமனையில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் அவர்களின் சுவரொட்டிகள்தானபெரிய காரணமாயிற்று. அதே நிலை திரும்புவதைக்கண்டு பதறிப்போன கருணாநிதி தேர்தல் பரப்புரைகளில் தமிழக மக்கள் தன்னை மீண்டுமொருமுறை முதல்வராக வாய்ப்பளிக்க இறைஞ்சிக் கேட்டுக்கொள்வதாகவும் ,தனது 40 வருட கால நண்பர் திரு,எம்.ஜிஆர் அவர்கள் திரும்பி வந்தவுடன் அவரிடம் ஆட்சியை ஒப்படைப்பேன் என்றும் தெரிவித்தார். அதை தமிழகம் மறக்க இயலுமா? தனக்கு காரியம் ஆக வேண்டுமானால் அவர் என்ன வேண்டுமானாலும் பேசுவதும்,எழதுவதும் அவரை அறிந்த காலந்தொட்டு தமிழகம் கண்டு வந்த உண்மை. இனிமேலும் அவர் திருந்துவார் என எதிர்ப்பார்ப்பது நமது அறிவீனம்.
வரலாறுதன்னை திருத்திக்கொள்ளும்!
ஈழத்தில் கொத்துகொத்தாக தமிழ் மக்கள் சாவில் விழுந்து கொண்டிருந்தபோது, தான் ஆட்சியில் இருந்த காரணத்தினால் எப்படியெல்லாமோ அவற்றை மறைக்க முயன்ற கருணாநிதி, தனதுகாவல்துறையை அசுரத்தனமாக ஏவி தமிழக மக்களின் எழுச்சியை அடக்கி, பின் தானும்போராடுவதாய் நாடகங்கள் நடத்தினாரே! எவற்றை மறப்பது அல்லது மன்னிப்பது? இப்போது தனக்கு உண்மை தெரியாமல் தவறு நேர்ந்து விட்டது என மன்னிப்பு கேட்டாலும் கூட நம்பிவிடக்கூடுமா? எதிரியை நம்பலாம், கூட இருந்தே குழி பறித்து, உள்ளிருந்தே உயிரைப் பறிக்கும் நோயாக இருக்கும் இரண்டகத்தார்களை சேர்க்கவே கூடாது. சொல்லியதை யெல்லாம் சொல்லவில்லை என்றும், சொல்லாதவற்றைச் சொன்னதாகவும் வலியுறுத்த முயற்சிப்பாரேயானால் இன்னும் பல செய்திகள் வெளிவந்து மக்களை விழிப்புறச் செய்யும். தமிழர்கள் காலத்தால் மறக்ககூடியவர்கள் என்ற நம்பிக்கை பொய்த்து விடும். காலம் தவறினாலும் வரலாறு தன்னை தானாகவே முழுமைப்படுத்திக் கொள்ளும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
கூட்டுக்களவாணிகளின் ஈழயாத்திரை
இவ்வளவு கொடுஞ்செயல்களுக்கு துணை போன அவர் தினம்தோறும் ஆயிரக்கணக்கில் ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு, பல லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் தங்கள் மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு வதை முகாம்களில் அடைபட்டு கொடுமைப் படுத்தப்பட்டபோது, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களை அங்கே அனுப்பி வைத்து திரைக்கதை எழுத முயன்றார். கச்சத்தீவுக்கு வந்திருந்த ஈழத்தமிழர்கள் தாங்கள் அங்கே படும் வேதனைகளை விவரிக்க இயலாது சுருக்கமாக தெரிவிக்க தீவில் அதிகமாக சாதாரண உடையில்திரிந்த இலங்கை உளவுப்பிரிவினரே காரணம் என்பதையும், அத்தமிழர்கள் தெரிவித்தனர் என்று25.02.2013ஆம் நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது.
இத்தனை ஆண்டுகள் கழிந்து ஒருவழிபாட்டுத் திருவிழாவிலேயே வாய்திறக்க இயலா நிலையில் அவர்கள் இருக்கும்போது,போர்முடிந்ததாகச் சொல்லப்பட்டவுடனேயே அரசுகள் ஏற்பாடு செய்து, முள்வேலி முகாம் தமிழர்களின் குறை கேட்க இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பி வைக்கப்பட்டது ஒரு பகுதிதானே? நாடாளுமன்ற உறுப்பினர்களும், தங்கள் இலங்கைச் சுற்றுலாவினை முடித்துக்கொண்டு ராஜபக்சேவின் பரிசினை வாங்கிக்கொண்டு தமிழகம் திரும்பி வந்து அங்கே நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும், மறுவாழ்வுப் பணிகள் வேகமாக நடைபெறுவதாகவும் ஒரு சேரக் கூறினர். அங்கே நடப்பதை நேரில் செல்லாமலேயே இங்கிருந்து அறியமுடிகிற நிலையில் காங்கிரஸ்கட்சியும்,திமுகவும் சேர்ந்து ஆடிய நாடகத்தால் நினைவில்லா என்றோ ஒரு நாளில் நாங்கள் வீசி எறிந்த ஒரு கவள எச்சில் சோற்றினை சாப்பிட்ட எம் தெரு நாய்கள் கூட இவர்களை முகர்ந்து பார்க்க முயலாது. இது போன்ற செய்திகள் இப்போதைய இளையோருக்கு தெரிய வாய்பில்லா நிலையில், தெரிந்த அனைத்து அரசியல்வாதிகளும் கூட்டுக்களவாணிகளாக வாய் திறக்க மறுக்கிறார்கள்.
கருணாநிதியின் இந்திய அரசும், பாவவிமோசனமும்!
இப்போது இவர் விரித்துள்ள கடையான மீண்டுமொரு ‘டெசோ’ வானது வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டுதான். சரி இந்த டெசோவால் யாருக்கு என்ன பயன்? ஈழத்தமிழர்களுக்கான நல்வாழ்வுக்கு இது வழி வகுக்குமா? எப்படி வகுக்கும்? கலைஞர் நினைப்பதென்னவோ தாம் விரும்பியபடி விடுதலைப்புலிகள் தோல்வியடைந்து விட்டனர். அதனால் இப்போதாவது மத்திய அரசும் ஈழ மக்களுக்கு ஏதாவது செய்யும். அந்த பலனை நாம்அறுவடை செய்து கொள்ளலாம் என நம்புகிறார். இன்றைக்கு அவர் விடுக்கும் அறிக்கைகளை பாருங்கள் – மத்திய அரசு இனியும் ராஜபக்சேவை நம்புதல் கூடாது. இந்திய அரசின் உதவிகள் ஈழத்தமிழர்களுக்கு சென்று சேரவில்லை. மாறாக சிங்களருக்கே போகிறது. அங்கே தமிழ்ப்பகுதிகள் சிங்களமயமாக்கப்படுகின்றன. பண்பாட்டு சின்னங்கள் அழிக்கப்படுகின்றன என்று அவர் கூறும் குற்றச்சாட்டுக்களைத்தான் அவர் ஆட்சியிலிருந்தபோது நாம் வைத்தோம். அவற்றை அப்போது மறுத்தவர் இப்போது புதிதாக செய்தியை வாசிக்கிறார். இது வரை ஈழ மக்களுக்கு இந்திய அரசு செய்ததெல்லாம் ஒரு பாவ விமோசனத்திற்காகத்தான் என்பது அவருக்குத்தெரியும்.அவை தமிழ் மக்களுக்கு தெரியாது என அவர் நம்புகிறார்.அங்கேதான் அவர்பெருந்தவறினைச் செய்கிறார். அவரை எந்த தமிழ் மக்களுமே நம்பத்தயாரில்லை.
ஈழத்தமிழர்களோ இன்னும் ஒரு படி மேலாக இவர் ஏன் இதையெல்லாம் செய்கிறார்; அவைநமக்கு நல்லதிற்கில்லையே என்று ஆதங்கப்படுகிறார்கள். அச்சப்படுகிறார்கள்.இதுவரை செய்த வினைகளே போதுமென எண்ணுகிறார்கள். எப்படியாகிலும் இருந்த இடங்களையாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டுமே என்ற கவலை அவருக்கிருப்பதை தமிழக மக்கள் அறிந்தாலும் அவருக்கு உறுதுணையாக இருக்கப்போவதில்லை. இன்றையத் தேதியில் உலகத்தமிழர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் செல்வி.ஜெயலலிதா ஒருவரே.அவரும் அதனைக் காப்பாற்றிகொள்ள நடவடிக்கைகளை எடுத்தால் இனி கலைஞர் பாடு அவ்வளவு தான். ஆக இந்த டெசோவால் யாரிடமும் இவருக்கு பலனில்லை. எத்தனை பலம் வாய்ந்த கட்சிகள் அவரோடு இணைந்துள்ளன பாருங்கள்.இவரின் நிலை தெரிந்தே காங்கிரஸ் கட்சி நம்பிக்கையோடு உள்ளது. செல்வி ஜெயலலிதாவோ சுயமாக சிந்திப்பவர்.கூட்டணியில் முரண்பாடு ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் கலைஞரால் என்றுமே அத்தகைய முரண்பாடுகள் வராது என்பதற்கு அவரின் பணிவும், உண்மையான கீழ்படிந்து இதுநாள் வரையான நடவடிக்கைகளும் இந்திய அரசியலின் இரு பெரும் கட்சிகளுக்கிடையேயும் பெரும் நம்பிக்கைகளை வளர்ந்துள்ளன. எனவே இந்த மாதிரி டெசோ வெல்லாம் அவர்களை அச்சப்படுத்தாது என்பது மட்டுமல்ல,விரைவிலேயே மூடுவிழாவும் நடத்து விடும். அது தமிழர்களுக்கு பெருத்த எதிர்காலத்தைஉருவாக்கும் என்பது மட்டும் உறுதி.
கருணாநிதி விளக்கியே ஆகவேண்டும்!
சாகும்வரையான ஒரு பட்டினிப்போராட்டத்தை இரண்டு மணித்துளிகளில் முடித்துக்கொண்ட கருணாநிதி அப்போது என்ன சொன்னார்? இந்திய உள்துறை அமைச்சகத் தகவல்படி அங்கே முள்ளிவாய்க்காலில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்துவதை இலங்கை இராணுவம் நிறுத்திக் கொண்டுவிட்டது. எனவே பட்டினிப்போரை நிறுத்திக் கொள்கிறேன் என அறிவித்தார். இயந்திர துப்பாக்கிகளைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.உண்மை நிலையும் அதுவல்ல. அதன்பின்தான் பல்லாயிரம் தமிழர்கள் குவியல் குவியலாக கொன்று குவிக்கப்பட்டனர் என்பதை சிங்கள இராணுவ மனிதாபிமானிகளே எடுத்து அனுப்பிய படங்கள் மூலம் தெரிய வந்தது. என்றாலும் அன்று எழுந்த கேள்வி எதுவெனில் – இலங்கையில் நடக்கும் போரில் அவர்கள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை.-நிறுத்திக்கொண்டார்கள் என்ற செய்தி இந்திய அரசுக்கு எவ்வாறு தெரியும்? யார் யாரிடம் எப்போது எவ்விதம் உறுதி கூறினார்கள்? அப்படி இந்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் இருந்த அவர்களின் உறவு என்ன என்பதை தமிழர்களுக்கு கருணாநிதி உடனே விளக்கியாக வேண்டும்!
ஆபத்தான அறிவு ஜீவிகள்!
தமிழர்கள் இவரை நம்பி மீண்டும் களமிறங்கினால் மிஞ்சப்போவது சுடுகாடகவோ அல்லது இடுகாடாகவோதான் இருக்கும். இப்போதாவது உணர்ந்து திரும்பியுள்ளாரே என எந்த ஒரு அறிவு ஜீவியாவது மகிழ்ச்சி தெரிவிப்பாரேயானால் அவரும் ஒருவகையில் ஆபத்தானவர்தான் என்பது உணரப்படவேண்டும். எத்தனை தடவைதான் வீழ்வது? இது என்ன விழ விழ எழுவோம் என்று கூற வேள்விக்களமா? எனவே எக்காரணங்கோண்டும் அவரையும் அவர் சார்ந்தவர்களையும் நம்புதல் எரிகிற கொள்ளியை எடுத்து தலையை சொரிந்து கொள்வதற்கு சமம் என்பதை தமிழர்கள் உணர வேண்டும்.
காட்டிக்கொடுக்கும் கயமை!
இந்திய மாநிலங்களில் தமிழகம் பெரிய மாநிலங்களில் ஒன்று. ஆனால் பஞ்சாப், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம் போன்ற தமிழகம் நீங்கிய மாநிலங்கள் எதிர்குரல் எழுப்புகையில் அடங்கி அவர்களை அமைதிப்படுத்த முயற்சி செய்யும் மத்திய அரசு தமிழகத்தில் எவ்வளவு எதிர்ப்புக்குரல் எழுப்பினாலும் அஞ்சாமைக்கு காரணம் இங்கே கருணாநிதி இருக்கிறார் அவர் எப்போதும் தங்களுடன் இருப்பார் என்று அவர்கள் நம்புவதேயாகும்.எனவேஇந்நிலையில் எக்காலத்திற்கும் தமிழகத்திற்கு விடிவு என்பதே இருக்காது என்பதை தமிழக மக்கள் தெளிவாக புரிந்து அதற்கான இடையூறினை களைய துணியவேண்டும். மத்தியஅரசுக்கு தமிழகத்தின்பால் அச்சம் வந்தால் ஒழிய விடிவில்லை. இதற்கு இங்கே நடக்கும் கேவல அரசியலே காரணம் என்பதை உணர வேண்டும். வேறு எந்த மாநிலத் தலைவர்களும் தங்களைவிட, தங்கள் கட்சியை விட, தங்களின் மாநில நலன்களை பெரிதாக கருதுகின்றனர். ஊழல் அரசியல் தன்னைச் சார்ந்தவர்களையும் மத்திய அரசுக்கு காட்டிக்கொடுக்கிறது. யார் இவர்கள் என்பதை தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள்.
கருணாநிதியும் தற்பெருமை தகிடுதத்தங்களும்!
கூரையேறி கோழி பிடிக்கமுடியாதவன் வானமேறி வைகுண்டம் போகத்துடித்தானாம் என்று ஒரு வழக்குமொழி உண்டு. அதுபோல் இந்த டெசோவின் தீர்மானங்களை திரு.கருணாநிதி, திரு கி.வீரமணி, திரு.தொல்.திருமா, திரு.சுப.வீரபாண்டியன் ஆகிய தமிழகத்தின் தனிப்பெருந் தலைவர்கள் அவர்களின் பிரதிநிதி மூலம் அனைத்து நாட்டு தூதுவர்களுக்கும், ஐநா மனிதஉரிமை கவுன்சிலுக்கும் நேரடியாகப் போய் அளிப்பார்களாம். அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என இவர்களும் ஊரை ஏமாற்றுவார்களாம். தான் இணைந்துள்ள இந்திய மத்திய அரசையே இணங்க வைக்கவோ, அசைத்துப்பார்க்கவோ முடியாத கையாலாகாத நிலையில் தாங்களாகவே தங்களை உச்சாணிக்கொம்பிலே தங்களை ஏற்றி வைத்துக்கொண்டு கனவு காணுகிறார்கள். இப்படித்தான் இசையமைப்பாளர் திரு ஏ.ஆர் ரஹ்மான் ஆஸ்கார் பரிசினை பெரும் நாளன்று “கலைஞர் தொலைக்காட்சி”யிலேயே ‘தமிழ்நாட்டு முதல்வர் என்ற முறையிலும், உலகத்தமிழர்களின் தலைவன் என்ற முறையிலும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என ஒளிபரப்பாகியது. அடுத்த முறை அந்த உலகத்தமிழர்களின் தலைவன் என்ற சொல் எடுக்கப்பட்டுவிட்டது. எதற்காக இதனை கூறுகிறோம் என்றால் திரு.மு.கருணாநிதி அவர்களுக்கு தன்னை ஒரு கற்பனையான இடத்தில் தான் எப்போதுமே வைத்துக் கொள்வதில் அலாதியான மகிழ்ச்சி. தமிழ் மக்கள் என்ன நினைகிறார்கள் என்பது அவருக்குத் தெரியாததல்ல. மாற்றுக்கட்சி ஆட்சி அலங்கோலமானால் ஒழிய, வேறு வழியின்றி இவரை எக்காலத்திலும் விருப்பப்பட்டு தமிழக மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். இதில் அவர்களுக்கு மற்றைய துண்டுக்கட்சிகளின் துணையும் தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமே!
டெசோவால் சாதிக்கமுடியுமா?
வரும் ஆகஸ்டு 5ம் திகதி இவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய நாடாளுமன்றம் எதிரில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக இந்தியா முறையிட இவர்கள் போர்முழக்கம் செய்து பெருஞ்சாதனை படைக்க இருக்கிறார்கள் என கூச்சமேயில்லாமல் ஒரு அறிவிப்பு. மக்கள் காதில் பூச்சுற்றிக்கொண்டு பார்த்து கைகொட்டுவார்கள் என்று எதிர்ப்பார்ப்பு வேறு. அமெரிக்கா,ஐரோப்பா,அவுஸ்த்ரேலியா,கனடா,பிரிட்டன் போன்ற நாடுகளே தலைகீழாக நின்று இந்தியாவை தங்களின் முறையான தீர்மானத்துக்கு செவி சாய்த்து வழிக்கு கொண்டு வரமுடியவில்லை. அப்படியுள்ளபோது இவர்களால் ஒரு சிறு துரும்பையும் அசைக்க முடியாது. எப்போதுமேவோ எனில், இவர்களாலும் முடியும். இவர்களின் அனைத்து நாடாளுமன்ற, மாநில அவை உறுப்பினர்கள் முன் மாதிரியாக பதவியை இன்றே உடனடியாக துறக்க வேண்டும். அதனைச் செய்தால் இவரைப்பற்றி அலட்சியமாக கருதும் காங்கிரஸ் அச்சப்பட்டு களமிறங்கும். அதை விட்டு விட்டு அதிமுக,காங்கிரஸ் போன்ற கட்சிகளும் துறந்தால் நாங்களும் செய்வோமெனில் இவர்கள் நாடகமாடுகிறார்கள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது?
தமிழக மீனவர்களின் பிரச்சனை ஏதோ அதிமுக ஆட்சியில் வந்த பிரச்சனையாக இன்று உரத்த குரலெழுப்பும் கலைஞர் தன் ஆட்சியில் சாதித்ததென்ன? தமிழக மீனவர்கள் பேராசைப் பிடித்தவர்கள். அவர்களின் பேராசைக் காரணமாகவே தாக்கப்படுகிறார்கள் என்ற அவரின் நிலைப்பாடு எல்லோருக்கும் தெரிந்ததுதானே? தமிழகத்தில் கொலைகுற்றம் சாட்டப்பட்டுள்ள இன்றைய இலங்கை அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவை அவருக்குத் தெரியாதா? அவருக்கு மிக நெருக்கமானவராயிற்றே! வரலாறு மிகக்கொடிய நிகழ்வுகளை,செய்திகளை மறைத்து விடுமா என்ன?என்ன பேசுகிறோம்,என்ன செய்தோம்,நமது தகுதிகள் என்ன என்று தெரியாமலே எதையும் பேசுவதா? தமிழக மக்கள் எந்தளவுக்கு கீழ்மையாக இவரைப்பற்றி கருத்தில் கொண்டுள்ளார்கள் என்பது அவருக்குத்தெரியும். அதெயெல்லாம் தாண்டித்தான் வோட்டு அரசியலில் வெற்றி பெற்று அதிகாரம் வந்து விட்டால் இன்று வரை அவ்வப்போது நடந்தது போல எல்லாம் சரியாகிவிடும் என எண்ணுகிறார்.
கருணாநிதியின் இனத்துரோகம்!
முதல்வராயிருந்த கடைசிஐந்தாண்டுகளிலும் மகன்களுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும், மகள்களுக்கும் சொத்துக்களைப் பிரிப்பதற்கும்,சமாதானம் செய்வதற்கும், அவர்கள் வாழ்வினை மேம்படுத்தவும், வழக்குகளில் இருந்து விடுவிக்கவுமே என உழைத்த கருணாநிதியின் அரசவை இருந்த காலத்தில்தான் தமிழினம் பெரும் அழிவை எதிர்கொண்டது. இச்செய்தியை வரலாறு நிலைப்படுத்தும். தமிழினத்திற்கு ராஜபக்சேவை விட, அவருக்கு துணை போன இந்திய, சீன, அமெரிக்க, ஜப்பானிய, ரஷ்ய, பாகிஸ்தானிய நாடுகளை விட கலைஞர் திரு.மு.கருணாநிதி என்பவர் அதிக கேடுகளை விளைவித்தவர் என்பதை நாங்கள் கூறி தமிழர்கள் அறியவேண்டியதில்லை. அவர்கள் தெளிவாகவே அறிவார்கள்.
எனவே தமிழர்களே, இன்று அவர் துவங்கி ஆர்ப்பாட்டங்களோடு செய்யும் ‘டெசோ’ வின் செயல்கள் அறியாதோருக்கு வேண்டுமானால் மகிழ்விக்கும் வானவேடிக்கையாயிருக்கலாம். ஆனால் அது சில நொடிகளில் மறைந்து போகும். மீண்டும் ஒரு பெரும் போராட்டம் வந்து மீட்சிக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சத்தில் அதனை வீழ்த்தவே இம்முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை நிலையாக மனதில் இருத்திக்கொள்ளவேண்டும்.
தமிழர்களே விழிப்புடன் இருப்போம் ‘கேட்டினை களைவோம்! இரண்டகம் வீழ்த்துவோம்! என்பதை மட்டும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி விடைபெறுகிறேன்.
வணக்கம்.நன்றி
கலைமணி (வழக்கறிஞர்)






