Designed by Iniyas LTD
தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இன்று பதவியேற்கிறார் !
தமிழகத்தின் முதலமைச்சராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று பதவியேற்க உள்ளார். 5 ஆம் முறையாக முதலமைச்சர் பதவி ஏற்கப்போகும் ஜெயலலிதா நேற்று காலை நடைபெற்ற அதிமுக எம்.எல்ஏக்கள் கூட்டத்தில் முறைப்படி சட்டமன்றக் குழுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்கப்போகும் தேதி பற்றி யூகங்கள் மட்டும் வெளியாகி வந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி நேற்று காலை 7 மணி அளவில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
இதில், சட்டமன்றக் குழுத் தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் ஆளுநரிடம் முறைப்படி வழங்கினார்.
இதையடுத்து ஆட்சி அமைக்க வருமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் ரோசையா. அடுத்தடுத்த நடவடிக்கைகள் வேகம் பிடிக்க, பிற்பகல் 1.28 மணிக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதாவுக்கு தொண்டர்கள் பூமழை பொழிந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமீனில் வெளிவந்தது தொடங்கி, விடுதலை என தீர்ப்பு வந்த நிலையிலும் இல்லத்தில் இருந்து வெளியே வராத ஜெயலலிதா 7 மாதங்களுக்குப்பிறகு முதல்முறையாக நேற்று வெளியே வந்தார்.
இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த அதிமுக தொண்டர்களின் மகிழ்ச்சி கரைபுரண்டது இதையடுத்து ஆளுநரை சந்தித்த ஜெயலலிதா 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகிய தலைவர்களுக்கு ஜெயலலிதா மரியாதை செலுத்தினார். பின்னர் பதவியேற்பு விழா பற்றிய அறிவிப்பும், அமைச்சர்கள் பட்டியலும் வெளியானது. அவர்களின் இலாக்கக்களும் அறிவிக்கப்பட்டன.