தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தின் சூழ்நிலை ஈழத்திற்கும் பாதிப்பே!

16128804_10207832755719477_2068377930_n

தமிழகத்தின் அரசியலையும் ஈழத்தின் அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது. பண்பாடு, கலாசாரம், வரலாறு, இலக்கியம் என்று அனைத்திலும் ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் நெருக்கம் உண்டு. தமிழகத்தை தாய்நாடாகவும் ஈழத்தை சேய் நாடாகவும் உணரப்படுகிறது. தமிழகத்தின் அரசியல் ஈழத்திலும் ஈழத்தின் அரசியல் தமிழகத்திலும் தாக்கம் செலுத்துவதை பார்த்து வந்திருக்கிறோம்.

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் ஈழத்து மக்களையும் பாத்தித்துள்ளது. தமிழகத்தின் கணத்திற்கு கணம் மாறும் அரசியல் சூழலை அங்குள்ள மக்கள் மாத்திரம் தொலைக்காட்சி அலைவரிகளின் வழி பார்க்கவில்லை. ஈழத்தில் உள்ளவர்களும் தமிழகத்தின் செய்திகளை கணத்திற்குக் கணம் அவதானித்தபடி இருக்கின்றனர். ஈழமும் தமிழகமும் பிரிக்க முடியாத இரு தேசங்கள் என்பதே இங்கு புலப்படுகிறது.

கடந்த டிசம்பர் 05ஆம் நாள், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மறைந்த நாட்களிலிருந்து தமிழகத்தில் சிக்கலான அரசியல் சூழ்நிலையே காணப்படுகிறது. குறிப்பாக ஜெயலலிதா அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாட்களிலிருந்தே தமிழகமும் ஈழமும் குழம்பிய நிலையிலேயே காணப்படுகிறது. ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சிப் பிளவை தமிழ் பேசும் மக்கள் அனுகி வரும் நிலை அரசியல் அறிவு கொண்டது.

பன்னீர்ச்செல்வம் – சசிகலா முரண்பாடு ஏற்பட்டபோது தமிழகத்தில் கட்சி சாராதவர்கள், படைப்பாளிகள், புத்தஜீவிகள், கல்வித்துறை சார்ந்தவர்கள் குழப்பமாக காணப்படவில்லை. தமிழகத்தில் தமிழ் தேசிய அரசியலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அது ஜெயலலிதாவின் மரணத்துடன் ஏற்பட்டது என்றும் அவர்கள் தீவிரமான செறிந்த கருத்துக்களை முன்வைத்தார்கள். ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மமே இப்போது அரசியல் பிரிவலையாக அடிக்கிறது என்றனர்.

பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றபோதிலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். தமிழக மக்களின் எழுச்சி, வெளிப்பாடே அதற்கு காரணம். அதனை அவர் ஒப்புக்கொண்டுமுள்ளார். அதற்கு முன்பாக தமிழீழ எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டு அவர் இயங்கியதால் எமக்கு பாதிப்புக்களும் ஏற்பட்டன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் துரோகத்தைக் காட்டிலும் அது ஈழ மக்களை பாதிக்கவில்லை என்ற கருத்தும் உண்டு.

ஜெயலலிதாவுக்குப் பின்னர் ஈழத்தமிழ் ஆதரவாளரான நடராஜனின் மனைவி சசிகலா முதல்வராகுவது ஈழத் தமிழருக்கு நன்மை என்ற கருத்தும் வெகு சிலரிடையே இருந்தது. நடராஜன் தமிழழகத்தில் ஈழ ஆதரவுடன் செயற்படுபவர் என்றும் அவரே முள்ளிவாய்க்கால் முற்றத்தை அமைத்தவர் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். அரசியலில் எவரும் புனிதரில்லை என்றும் ஈழத் தமிழ் மக்கள் தமது நலனை அடையக் கூடியவர்கள் வருவதையே விரும்ப வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. அத்துடன் சசிகலா குற்றவாளி என்பதுடன் ஜெயலலிதாவும் குற்றவாளி என்றே தீர்ப்பு கூறுகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, ஜெயலலிதாவின் மரணத்தில் அல்லது அதனுடன் தொடர்புடைய மறைக்கப்பட்ட மர்மங்களில் சசிகலாவுக்கு தொடர்புண்டு என்ற பார்வையும் உண்டு. இதேவேளை பன்னீர்ச்செல்வம் ஊடாக தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை நடத்த நினைக்கிறது என்ற கருத்தும் மக்களிடம் உண்டு. உண்மையும் அதுவே. கடந்த காலத்தில் தமிழகத்தில் எவரெல்லாம் ஆள நினைத்தனரோ, அவர்களே இப்போதும் ஆள முயல்கின்றனர்.

விறுவிறுப்பு நிறைந்த இந்த ஆட்டத்தை மோடி நாயகன்தான் நடத்திக் கொண்டிருக்கிறார். நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால், ஈழத் தமிழ் மக்களுக்கும் இதில் பாதிப்பும் பின்னடைவுகளும் உண்டுபோலத் தென்படுகின்றன. அ.தி.மு.க, தி.மு.க முதலிய திராவிட சதிகள் அகன்று தமிழ் தேசிய தலைமைகள் தமிழ்நாட்டை ஆளும் காலமே எமக்கு அவசியம். எப்படி இருந்தாலும் ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமையை வெல்லும் போராட்டத்தை முன்னகர்த்தும் அரசியல் செயல்பாடுகளில் நிதானமாக ஈடுபடுதல் அவசியமானது.

ஆசிரியர்,
செண்பகம்.
15.02.2017

Comments
Loading...