Designed by Iniyas LTD
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி: அரசியல் தலைவர்கள் பாராட்டு!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசிற்கு கருணாநிதி நன்றி
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கருணாநிதி கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் அந்தப் போட்டிகளை நடத்தும் விழாக் குழுவினர் சந்தித்து வலியுறுத்தியதாகவும், திமுக சார்பில் மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதியதாகவும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கிடைப்பதற்காக, முயற்சி மேற்கொண்ட மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் அதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்.
பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு ராமதாஸ் நன்றி
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பொன் ராதாகிருஷ்ணனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். எனினும், இந்தப் போட்டிகளுக்கு யாரும் தடை வாங்க முடியாதபடி சட்டப்பாதுகாப்பு செய்யவும், தொடர்ந்து போட்டிகள் நடைபெற நிரந்தர அனுமதி அளிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாணை மகிழ்ச்சியளிக்கிறது: வைகோ
காங்கிரஸ் கூட்டணி அரசால் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அரசாணை வெளியிட்டது மகிழ்ச்சி அளிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
போட்டிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு வழங்கி, தமிழரின் மரபுவழி வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்ததில் மத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் ஒரே பிரதிநிதியான பொன் ராதாகிருஷ்ணனின் ஒருங்கிணைப்புப் பணியை பாராட்டியுள்ளார். தமிழகத்தின் ஒருமித்த கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.