Designed by Iniyas LTD
“தமிழீழ விடுதலைப் புலிகள்”
தாழும் தலைகளொடு தமிழராய்
நாம் வாழ வழியின்றி விக்கித்து
மாழும் மரணங்களால்
எம் வாழும் நாட்களிலும்
மானம் தொலைத்து நின்றோம்…
காயங்களை ஆற்றாமல்
கண்ணீர் வெள்ளத்தில் நனைத்தும், குளிப்பாட்டியும் கால்களை அகல வைத்துக் கரைபுரண்டோடியது
துயரக் காட்டாறு…
சோகம் வாழ்வாய் நின்றவர்க்குள் போதும் இதுவென்று விடைகண்ட வேளை…
கால உருவாய் , கண்ணீர்க்கு விடையாய், கங்கைகொண்ட சோழ மரபாய்
வந்தெம் மானம் காத்து,
கூன் நிமிர்த்தி, கும்பிட்ட கரங்களின் விலங்குடைத்து
கண்களில் நீர் துடைத்து
காவிய நாயகராக்கி
காலம் வெல்ல களம் வெல்ல வீரம் செதுக்கிய கரிகால வேந்தன்
உதித்த பொற்காலம்…
அச் சிந்தனைச் செம்மலின் எண்ணக்கருவினிலே வீர உருவெடுத்த
முத்தே! முதற்பிள்ளையே!
‘தமிழீழ விடுதலைப் புலிகள்’
எனும் மான நிமிர்வே!
நீ எங்கள் கவசம்!
நீ எங்கள் போர்வாள்!
நீ எங்கள் தர்மம்!
நீ எங்கள் தார்மீகம்!
நீ எங்கள் மேன்மை!
நீ எங்கள் மானச்சீருடை!
நீ எங்கள் மறம்!
நீ எங்கள் அறம்!
நீ எங்கள் மகிழ்ச்சி !
நீ எங்கள் மனச்சாட்சி!
நீ எங்கள் உயரம்!
நீ எங்கள் வியாபகம்!
நீ எங்கள் வரம்!
நீ எங்கள் கரம்!
நீ எங்கள் எழுச்சி!
நீ எங்கள் உயர்ச்சி!
நீ எங்கள் படை!
நீ எங்கள் அடையாளம்!
நீ எங்கள் உயிர்மூச்சு!
நீ எங்கள் ஒளிவீச்சு!
நீ எங்கள் வழி!
நீ எங்கள் ஒளி!
நீ எங்கள் கொடி!
நீ எங்கள் முடி!
நீ எங்கள் வாய்மை!
நீ எங்கள் வல்லமை!
நீ எங்கள் நிறை!
நீ எங்கள் போர்ப்பறை!
நீ எங்கள் புன்னகை!
நீ எங்கள் பொன்னாடை!
நீ எங்கள் வெற்றி!
நீ எங்கள் உயிராயுதம்!
நீயே எங்கள் விடுதலை மூச்சு!
பாட்டன் செய்த வீரத்தையும் பூட்டன் காத்த மானத்தையும் பாடப்புத்தகத்தில் மட்டும் படித்தறிய முடிந்த சந்ததியை
பட்டைதீட்டிப் பக்குவாய் படையாக்கிய
பராக்கிரமம் உந்தன் வரலாறு…
உனது மான இலட்சியத்தை நெஞ்சிருத்தி
உயிர்தந்த ஆயிரம், ஆயிரம் வீரமறவர்கள் வானுறை தெய்வங்களாய் உன்னை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்! நீ வரம்பெற்று இனம்வாழ விடுதலை வழிகாட்டவேண்டுமென்று!
ஓ படை நடந்த வீரர்களே, வீராங்கனைகளே!
எம்மை ஆரத்தழுவும் அன்னையின் பரிவுள்ள அன்புடை நெஞ்சினன் அந்த வீரத் தலைவனை எண்ணிக்கொள்ளுங்கள்!
கூடித்திரிந்து, ஒரு கூட்டில் வளர்ந்து நல் நட்பை வளர்த்து நாட்டைக்காக்க தம்மைக் கொடைதந்த தோழர்கள், தோழியரை நெஞ்சிருத்திக்கொள்ளுங்கள்…!
போருக்கு நடுவிலும், பொத்தி எம்மைக்காத்த எம் தேசத்து மக்களை நினைவிற்கொள்ளுங்கள்…
நீங்கள் வீரராய் நிமிர்ந்து எம் தேசத்தில்
நடந்த கால்களைப் பரிவோடு தடவிக்கொள்ளுங்கள்!
வீரமாய் நின்று நீங்கள் போராடி ஏற்ற
விழுப்புண்களை ஒருமுறை பெருமிதத்துடன் தொட்டுக்கொள்ளுங்கள்!
எம் கல்லறை மேனியரைத் தழுவிச்சென்ற, வீரராய் நீங்கள் நடைபயின்றபோது சுவாசித்த காற்றை ஒருமுறை வாயுமண்டலத்திலிருந்து
பிரித்தெடுத்து நெஞ்சார மூச்சாய் இழுத்து கண்களை மூடிக்கொள்ளுங்கள்…
யாருக்கும் அஞ்சாத தர்மத்தின் வாழ்வதனை வலிகளையும் தாண்டி வாழ்ந்த வாழ்வின் பெருமைக்கு உரித்தான ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ போராளிகள் என்ற மேன்மையில் நிமிர்வு பெறுங்கள்!
“மறப்போரில் மண்டியிடாத சாதனை நாட்டியவர்கள்.., அறப்போரை அறிவாயுதம் கொண்டு வெல்வோம்!”
“வாழ்க தமிழீழ விடுதலைப்புலிகள்
வெல்க அவர்தம் இலட்சியம்”
-காந்தள்-