தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழீழமண்ணிலிருந்து வரும் சுவரொட்டிகள் மக்களின் விடுதலைத்தவிப்பின் வெளிப்பாடே

kase anna

தமிழீழ மண்ணின் தெருக்களெல்லாம், சுவர்களெல்லாம் நெருப்பைக்கக்கும் சுவரெட்டிகள் திடீரென்று தோன்றியிருப்பது தமிழீழ மக்களின் இனியும் அடக்கி- மூடிமறைத்து வைக்க முடியாத விடுதலைத்தவிப்பின் வெளிப்பாடே அன்றி வேறில்லை.

ஒன்றரை இலட்சம் சிங்களப்படை வெறியர்களின் துப்பாக்கி முனையில் தமிழர்களின் தாயகமான தமிழீழ மண் சிங்களக்குடியேற்றத்தால் பாதிக்கப்படுகின்றது – தாய்த்தன்மை சிதைக்கப்படுகின்றது.

அண்மையில் கிழக்குமாகாணத்தை புறந்தள்ளி வடமாகாணம்-வடமாகாணம் என்று குறிப்பிடுவதன்மூலம் தமிழீழத் தாயகத்தின் எல்லை சுருக்கப்பட்டும், தேய்க்கப்பட்டும் அழிக்கப்படுகின்றது.

மக்கள் துண்டு துண்டாக குவிக்கப்படுவது மட்டுமல்ல அவர்களது தாயக மண் துண்டு துண்டாக சிதைக்கப்படுவதும் இன அழிப்பு நடவடிக்கையே! மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்புத் தலைவர்கள் கூடத் தங்கள் தாயகம் தமிழீழம் என்று வாய்திறந்து சொல்ல முடியாத வகையில் சிங்கள ஆட்சியாளர்களின் துப்பாக்கி முனை வலுப்பெற்றுள்ளது.

தமிழீழ மண்ணின் இன்றைய அடிமை நிலையைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் சுவரொட்டிகளில் காணப்படும்   கூற்றுக்கள் தமிழீழ மக்களின் நெருப்பாய் எரியும் மனக் குமுறலையே எடுத்துக்காட்டுகின்றன.

உண்மையில் தமிழீழத்தில் 65 ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பது போர்க்குற்றமோ, மனித உரிமை மீறலோ அல்ல , பச்சை இன அழிப்பு  நடவடிக்கையே ஆகும் என இச் சுவரொட்டிகள் உரக்கப்பேசுகின்றன.

1983இல் இலங்கையில் நடப்பது இன அழிப்பு என்பதை இந்திராகாந்தி ஒப்புக்கொண்டார். ஆனால் பின்னர் இந்திய அரசியல் தலைவர்கள் இக்கொள்கையை கைவிட்டு சிங்கள அரசுடன் இணைந்து தமிழருக்கெதிரான இன அழிப்பை மேற்கொண்டனர் எனக்கூறும் இச் சுவரொட்டிகள் அண்மையில் ஜெர்மனியில் நடைபெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயாத்தில் தீர்ப்பில் முதல்தடவையாக ஓர் உலக நிறுவனம் முள்ளிவாய்க்காலில் நடந்தவற்றையும் நடப்பவையும் ஓர் இன அழிப்பு நடவடிக்கையே என ஒப்புக்கொண்டதைச் சுட்டிக்காட்டுகின்றன.

தமிழீழத்தை நிறுவுவதற்குத் தாயகம் உள்ளடக்கிய உலகத்தமிழரிடையே கருத்துக்கணிப்பு  நடத்துவதொன்றே தமிழீழ மக்களுக்கு இனி உள்ள தீர்வுக்கான ஒரே வழி என்று ஒரு சுவரொட்டி தமிழீழ முழக்கமிடுகின்றது.

புதிதாக தமிழீழமண்ணில் புறப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் தமிழீழ மக்களின் புயல் மூச்சே  அன்றி வேறில்லை.
முள்ளிவாய்க்கால் தமிழீழ மக்களை முடக்கிவிடவில்லை அடக்குமுறை அரசின் ஒடுக்குமுறை வெறியாட்டம் அவர்களை அடக்கி விடவில்லை என்பதை இச் சுவரொட்டிகள் அறிவிக்கின்றன.

சிங்கள இனவெறி அரசின் சட்டங்களை உடைத்துக்கொண்டு படை வெறியர்களின் கட்டுப்பாட்டையும் காவலையும் சிதறடித்துக் கொண்டு இச் சுவரொட்டிகள் சிலிர்த்தெழுந்துள்ளன.

புலிகளின் வரவுக்குக் கட்டியம் கூறும் தமிழீழ மக்களின் புதிய முன்னறிவிப்பு இச் சுவரொட்டிகள். எதிரிகளை ஓங்கி அறையும் எரிமலை நெருப்பின் எச்சரிக்கை இச்சுவரொட்டிகள் .தமிழீழ மண்ணின் இன்னொரு தலை நிமிர்வு இச் சுவரொட்டிகள்  என உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...