Designed by Iniyas LTD
தாய் நாட்டை காத்த தமிழன் தன் வீட்டைக் காக்க முடியாமல் தவிக்கின்றான்…
பிரபாகரன் என்றொரு
பெரு வெளிச்சத்தை
தொலைத்து விட்டு
பெரும் அச்சத்தோடு தான்
அல்லும் பகலும் மக்கள் வா(டு)ழ்கின்றனர் தினம் தோறும் திசையெங்கும்
திருடர்களுக்குப் பயம்
பட்டப் பகலில் கூட
படலைகள் பூட்டிக் கிடக்கின்றது
நாய்களை நம்பியே
நாளும் வாழ்க்கை நடக்கின்றது
தாய் நாட்டை காத்த தமிழனால
தன் வீட்டைக் காக்க முடியாமல்
தவிக்கின்றான்
கல்வி கற்கச் சென்ற பிள்ளை
காமுகர்கள் பிடியிலிருந்து
கற்போடு திருப்பி வருவாளோ
என்ற தீராப் பயம்
பதினாறு கடந்த பாவையர் மட்டுமல்ல
பால் மணம் மாறாத
ஆறு வயதுக் குழந்தையையும்
மனித மிருங்கள் சிதைத்து விடுகின்றது
பகை என்று வந்து விட்டால
வார்த்தைச் சொற்களை விடவும்
வாள் பொல்லுகள் தான்
அதிகம் பயன் படுத்தப்படுகின்றது
மரங்களையே உயிராய் வளர்த்தவர்கள்
மனிதர்களை வெட்டி சாய்க்கின்றார்கள்
கேரளத்து கஞ்சாவுக்கு மட்டும்
பஞ்சமில்லைவிடுதலைப் போதையில் திரிந்த
வீர அஞ்சாத் தமிழன்
கஞ்சாப் புகையில் மயங்கிக் கிடக்கின்றான்
சாவு வீட்டிலில் கூட
சாராயப் போத்தில்
சம்பிரதாயப் பொருளாகி விட்டது
ஏதிலியாய் ஏறோப் பிளேன்
ஏறி பாதித் தமிழன் போக
எஞ்சியுள்ள தமிழர்கள்
ஏர் கலப்பை உழவு மறந்து விட்டார்கள்
உந்துருளிகள் உறுமிக்கொண்டு ஓடுது
எதிரே வருபவர்கள்
எமனின் வாகனமாகவே பார்க்கின்றார்கள்
போரில் காயப்பட்டவர்களை விடவும்
போக்குவரத்தில் காயப்பட்டவர்கள் அதிகமாக
போதான வைத்திய சாலை நிரம்பி வளியுது
சாம்பல் தனல் அணையாது கிடந்த அடுப்புகளில்
சாம்பல் வெள்ளைப் பூனைகள்
உறங்கிக் கிடக்கின்றது
உறவுகள் பார்சல் சாப்பாட்டில்
பங்கு பிரித்து பரி மாற
பசி மாற்றுகின்றனர்
கையை விட்டு இறங்காத
கைக் குழந்தைக்கும்
கைபோன் தேவை
சிரட்டையில் மண் சோறு கறி
விளையாட்டுகள் மருவி
சிம் காட்டில் விளையாட்டு சிறுவர்கள் மாறி விட்டார்கள்
கை பேசியில் தான்
ஊரில் உள்ள உறவுகள்
நாடகத் தொடர் இடைவேளையில்
தங்களுக்குள் பேசிக் கொள்கின்றார்கள்
ஊரில் உள்ள கோயில்களும்
வீடுகளும் விஸ்திரமாய் பெருத்து விட்டது
ஆனால்
கோயில்களில் கும்பிடும்
பக்கத்தர்கள் கூட்டமும்
வீடுகளில் குலவி மகிழும்
உறவுகள் கூட்டமும்
எண்ணிக்கை குறைந்து விட்டது
வீடுகளில் கால் நடை
வளர்ப்புகள் மட்டுமல்ல
வீதிகளில் கால்நடைப்
பயணங்களையும் மறந்து விட்டார்கள்
போற போக்கைப் பார்த்தால்
இனி வாற நாட்களில்
ஆட்டோக்களில் தான்
அயல் வீட்டுக்கும் போவார்கள் போல்
அம்மியை தொலைத்து
ஆட்டுக்கல்லை தொலைத்து
உரல் உலக்கையை தொலைத்து
உறுப்புக்கு ஒரு நோயைத் தேடி
வைத்திருக்கின்றார்கள்
மருந்தென்பது உணவு முறை போலாகி விட்டதமருந்தோடு தான் மனிதர்கள் இயங்கின்றார்கள்
காசு பணத்தை
காகிதமாய் தான் பார்க்கின்றார்கள்
ஜயாயிரம் ரூபாய் தாளோடு போனால்
அரைக் கைப்பை பொருளாவது
அங்காடியில் வாங்கலாம்
சந்தையில் மீனுக்கு விலை கேட்டால்
பொன்னுக்கு விலை கூறுகிறார்கள்
உறவுகளை விடவும்
உடமைகளை மதிக்கின்றார்கள்
உறவுகளை உதறிவிட்டு
உடமைகளோடு வாழ்கின்றனர்
அன்றைய தலைவர்மார்களோ
வீட்டுக்கு ஒருவன் வந்தால்
தனி நாடு அடையலாம் என்றார்கள்
இன்றைய தகப்பன்மார்களோ
வீட்டுக்கு ஒருவன் வெளிநாடு போனால் தான்
வேளா வேளைக்கு உண்ணலாம் என்கின்றார்கள்
ஈழத்தில் தலைவர்மார்களுக்குப் பஞ்சமில்லை-ஆனால்
எவருக்கும் உறுதியான நெஞ்சமில்லை
பரதவிக்கும் மக்களுக்கு உதவ யாருமில்லை
பதவியை தக்க வைக்கவேண்டுமென்ற தவிப்பே தலைவர்மாருக்கு அதிகம்
அன்று ஒரு மரண வீட்டில்
முதியவர் சொன்னார்
இன்னொரு பிரபாகரன் வரும் வரை
இந்த அவலம் மாறப் போவதுமில்லை
இனியொரு பிரபாகரன் ஈழத்துக்கு
வரப்போவதுமில்லை…..