Designed by Iniyas LTD
தினகரன் கைது விவகாரம்: பெண் நீதிபதிக்கு மிரட்டல்
தினகரன் கைது விவகாரம்: பெண் நீதிபதிக்கு மிரட்டல்
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் பேரம் பேசப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் சுகேஷ் சந்திரசேகர் டெல்லி போலீஸ் காவலில் இருந்தபோதே, பெண் நீதிபதி ஒருவரை மிரட்டி ஜாமீனில் விடுதலையாக முயன்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அறங்கேறியுள்ளது. அன்றுதான் சுகேஷ் சந்திரசேகரின் 11 நாள் போலீஸ் காவல் முடிந்து அவரை டெல்லியில் உள்ள தில் ஹசாரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக விசாரணை நீதிபதியான இருந்த பெண் நீதிபதி பூனம் சவுந்திரிக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர், உடனடியாக சுகேஷ் சந்திரசேகரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். தான் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் தனிச் செயலாளர் ஹனுமந்த் பிரசாத் என்றும் அந்த நபர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
இதற்கு அந்த பெண் நீதிபதி உடன்படவில்லை. உடனடியாக தொலைபேசி இணைப்பையும் துண்டித்துவிட்டார். இருந்தாலும் தனது தனிப்பட்ட செல்போனை எடுத்து பார்த்தபோது, அதிலும் ஏராளமான மிஸ்டுகால் வந்திருந்தது. குறிப்பிட்ட எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசியபோது, உச்சநீதிமன்ற நீதிபதி தான் யாரையும் பேச சொல்லவில்லை என்றும், அந்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும், அவர் கூறிய பரிந்துரை எதையும் செய்ய வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் நீதிபதி, உடனடியாக இதுகுறித்து குற்றவியல் தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அவருடைய பரிந்துரையின் பேரில் காவல்நிலையத்தில் புகார் செய்யும்படி பெண் நீதிபதி அறிவுறுத்தப்பட்டார். இதற்கிடையில் சுகேஷ் சந்திரசேகர், அதே பெண் நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் மே 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டார். இதனைத் தொடர்ந்து டெல்லி காவல்துறையில் மேலும் ஒரு புகாரை பதிவு செய்திருக்கிறார். அதில் இந்த விவரங்களையெல்லாம் தெரிவித்து சம்பந்தப்பட்ட நபரை பிடித்து நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியிருக்கிறார்.
அந்த புகாரின் அடிப்படையில் நீதிபதியை தொலைபேசியில் மிரட்டிய அடையாளம் தெரியாத நபர்கள் மீது ஆள் மாறாட்டம், அரசு ஊழியரை மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த நபர்களை கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.