Designed by Iniyas LTD
திருச்சி மாணவர்களின் தொடர் தர்ணா போராட்டம் – கல்வி நிறுவனத்திற்கு காலவரையற்ற விடுமுறை
திருச்சி இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவன மாணவர்களின் தொடர் தர்ணா போராட்டத்தால், கல்வி நிறுவனத்திற்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே சேதுராப்பட்டியில் கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து, ஐஐஐடியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், தகுதியான பேராசிரியர்களை நியமிக்க வேண்டும், தரமான உணவு, விடுதி வசதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கடந்த சில மாதங்களாக மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும், கடந்த 18ம் தேதி முதல் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும், நேற்று முதல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ஐஐஐடிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய மனித வளத்துறை நேரடியாக தலையிட வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.