தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தென்பெண்ணையாற்றில் 13 டிஎம்சி அளவிற்கு கலக்கும் பெங்களூரு கழிவுநீர்

river2நாள்தோறும் பெங்களூரு நகரின் கழிவு நீர் தென்பெண்ணை ஆற்றில் கலக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில், கர்நாடக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ள சூழலில் ரசாயனங்களால் ஆற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காண்போரை அதிர்ச்சியடையவைக்கின்றன.

கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு, ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை கடந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இந்த நதி வரும் வழியில், பெங்களூருவின் கிழக்குப் பகுதியில் 900 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் வரத்தூர் ஏரியில், கடந்த 50 ஆண்டுகளாக கழிவு நீர் தொடர்ந்து கலக்கப்பட்டு வருகிறது. சில மாதங்களாக ஏரி முழுவதும் நுரையால் சூழ்ந்து காணப்பட்டு, அடிக்கடி ஏரி தீப்பிடித்து வருகிறது. ஏரியில் ஆபத்து நிறைந்த ரசாயனக் கழிவுகள் கலப்பதே, தீப்பிடிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில்தான் பெண்ணையாற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், கர்நாடக அரசுக்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினந்தோறும் பெங்களூரு நகரின் கழிவுகளும், தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகளும் கலந்த கழிவு நீர், தென்பெண்ணையாறு வழியாக தமிழகம் வருகிறது. இதன் மூலம் 13 டி.எம்.சி அளவிற்கு மேல் அபாயகரமான கழிவு நீரை கர்நாடகம் தமிழகத்திற்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது என்ற தகவல் தமிழக விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வரத்தூர் ஏரியில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கப்படும் கழிவு நீரை சுத்திகரித்த பின்னர்தான் வெளியேற்ற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். கர்நாடக அரசின் இத்தகைய செயலை தமிழக அரசு கண்டிக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே ஆற்று மணல் கொள்ளையால்,கட்டாந்தரையாக காட்சியளிக்கும் தென்பெண்ணையாற்றிற்கு, பெங்களூரு மாநகரின் கழிவுநீர் வடிவில் அடுத்த ஆபத்து வந்திருக்கிறது. மணல் கொள்ளையால், தென்பெண்ணையாற்று கரையோரப் பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து போன நிலையில், தற்போது, கழிவுநீர் மாசால், மீதமிருக்கும் நீரும் பாதிக்கப்படும் பேராபத்து உருவாகியுள்ளது. இதே நிலை நீடித்தால், தென்பெண்ணையாற்று படுகையில், ஆற்றின் நீராதாரத்தை நம்பியும், அதனை நீராதார மூலமாக கொண்டுள்ள ஆற்றங்கரையோர பகுதிகளும், கிணறுகளும் வற்றிப்போய்,விவசாயம் பொய்த்துப் போய்விடும் என்பது விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது. அரசாங்கம் நீர்நிலைகளை தூய்மையாக பாதுகாத்து விவசாயத்துக்கு துணைநிற்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Comments
Loading...