Designed by Iniyas LTD
நடந்து சென்றவர்கள் மீது லொறி மோதி பெண்கள் உட்பட மூவர் பலி!
புத்தளம் – அநுராதபுரம் வீதியில் சாலியவெவ எனும் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் 83 மற்றும் 62 வயதுகளை உடைய இரு பெண்களுடன் 12 வயது சிறுவன் ஒருவனுமே உயிரிழந்துள்ள்ளனர். வீதியில் நடந்துகொண்டிருந்த இவர்கள் மீது லொறி மோதியதில் இந்த அகோர விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய போயா தினத்தில் விகாரையில் இடம்பெறும் சமய நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு சென்ற போதே இந்த அசம்பாவிதம் பதிவாகியுள்ளது.
புத்தளம் திசையிலிருந்து வேகமாக வந்துள்ள லொறி ஒன்று வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இவர்கள் மீது மோதியுள்ளது.
இவ்விபத்தில் இரு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் சிறுவன் பலத்த காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த சிறுவனை விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியே லொறியில் ஏற்றிக் கொண்டு புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் சிறுவன் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்து வைத்தியசாலையில் சிறுவனை அனுமதித்துவிட்டு சாரதி லொறியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் வைத்தியசாலை பணியாளர் ஒருவர் குறித்த லொறியின் இலக்கத்தை குறித்துக் கொண்டுள்ளதாகவும் அந்த இலக்கத்தை வைத்து குறித்த லொறியினை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பீ. ஏ. ஹேமலதா (வயது 62), கே. ஏ. யசோஹாமி (வயது 83) மற்றும் இமல்கா ஹேசான் (வயது 12) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
சாலியவெவ ஸ்ரீ பொலிஸார் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.