Designed by Iniyas LTD
நளினிக்கு தமிழக அரசு பதில் கூறவேண்டும்! உயர்நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றில், நளினி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ராஜீவ் கொலை வழக்கில் எனக்கு கீழ் கோர்ட்டு தூக்குத்தண்டனை விதித்தது. இந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. பின்னர், இந்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு உத்தரவிட்டது.
நான் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று தமிழக அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தது.
இதன்படி 1994-ம் ஆண்டு அரசாணையும் பிறப்பித்தது. இந்த அரசாணையின்படி, முன்கூட்டியே விடுதலை பெற நான் தகுதியானவள்.
கற்பழிப்பு, கொலை போன்ற கொடூர குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்றவர்கள் பலர் இந்த அரசாணையின்படி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, என்னையும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி கடந்த 2014-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22-ந்தேதி தமிழக உள்துறை செயலருக்கு கடிதம் மனு அனுப்பினேன். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.
எனவே, என் கோரிக்கை மனுவை பரிசீலிக்க தமிழக உள்துறை செயலருக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் உத்தரவிட்டார்