Designed by Iniyas LTD
நீதிமன்றில் ஆஜராகாத மெஸ்ஸி
அர்ஜென்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரரான மெஸ்ஸி, வரிஏய்ப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கால்பந்து களத்தில் கலக்கும் மெஸ்ஸி, விளம்பர உலகிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2007-2009ம் ஆண்டு வரை அவர் வருமான வரியை சரியாக செலுத்தவில்லை என்று ஸ்பெயினில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் ரூ.31.46 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு பார்சிலோனாவில் உள்ள கேடாலோனியா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் மெஸ்ஸி விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் நேற்று ஆஜராகவில்லை. ஹேராண்டுராஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதுகு பகுதியில் காயமடைந்த மெஸ்ஸி ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் நேற்று தொடங்கிய இறுதி விசாரணைக்கு அவர் வரவில்லை.
இந்த வழக்கில் மெஸ்ஸி மீதான குற்றம் உண்மை என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 22 மாதசிறை தண்டனை கிடைக்கும். அதே சமயம் ஸ்பெயின் சட்டப்படி முதன்முறையாக 2 ஆண்டுக்குள் தண்டனை பெற்றால் அது நிறுத்தி வைக்கப்படும். இதனால் மெஸ்ஸி தப்பவும் அதிக வாய்ப்பு உள்ளது.