Designed by Iniyas LTD
நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து
நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேபாளத்தில் சித்வான் என்ற மாவட்டத்தில் இன்று அதிகாலை 4.45 மணி அளவில் பேருந்து ஒன்று பயணிகளுடன் நாராயன்காத்-முக்லின் என்ற சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரையும் தாண்டி 100 அடி ஆழமுள்ள திரிசூலி ஆற்றில் விழுந்தது. இதில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
17 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேபாளத்தில் மலைபாங்கான பகுதிகளில் சாலைகள் மோசமாக காணப்படுவதால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன என்று இந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் கிழக்கு நேபாள் மலைபகுதியில் இதே போன்று பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 33 பேர் பலியாகி உள்ளனர். 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.