Designed by Iniyas LTD
பயணிகளை நடுத்தெருவில் இறக்கிவிடும் பேருந்துகள்!
மக்களின் அடிப்படை தேவையில் ஒன்றான போக்குவரத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதே பேருந்து சேவையின் அடிப்படை. அதிலும் ஏழை, எளிய மக்களே பேருந்துகளில் போக்குவரத்துச் செய்கின்றனர். அதிலும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பேருந்து சேவை ஒன்றே துணை.
கிளிநொச்சி – முல்லைத்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் சில தனியார் பேருந்துகள் உரிய வகையில் தமது சேவையை ஆற்றுவதில்லை என்று மக்களால் குற்றம் சுமத்தப்படுகின்றன. அதாவது மக்களை நடுத்தெருவில் இறக்கிவிட்டு அவர்களை பெரும் அவலத்திற்குள் தள்ளும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.
கிளிநொச்சியிலிருந்தோ, அல்லது யாழ்ப்பாணத்திலிருந்தோ முல்லைத்தீவு வரும் ஒரு பேருந்து மாஞ்சோலை வைத்தியசாலை கடந்து முள்ளியவளை வரை செல்ல வேண்டும். அதேபோல திருமலையிலிருந்து வரும் சில பேருந்துகள் முல்லை மாவட்ட எல்லையான விசுவமடு வரை செல்கின்றது.
இதைப்போலே கிளிநொச்சிக்கு வரும் பேருந்துகள் கிளிநொச்சி வைத்தியசாலை வரை செல்கின்றன. ஏனெனில் மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில் இருந்து வருபவர்களில் பலர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நோயாளியாகவோ, நோயாளியை பார்வையிடவோ வருவதுண்டு.
ஆனால் முல்லைத்தீவிலிருந்து கிளிநொச்சிக்கு வரும் சில பேருந்துகள் கிளிநொச்சி டிப்போ சந்தியில் மக்களை இறங்கிவிடுகின்றனர். முல்லைத்தீவில் பேருந்தில் ஏறும்போது கிளிநொச்சி வைத்தியாசாலை வரை செல்வோம் என்று கூறிவிட்டு கிளிநொச்சி வந்தவுடன் டிப்போ சந்தியில் இறக்கிவிடுகின்றனர்.
இதனால் வயது முதிர்ந்தவர், நோயாளிகள், ஏழைய எளியவர்கள் நடுத்தெருவில் இறங்கிவிடப்படுகின்றனர். இவர்கள் மீண்டும் மற்றொரு பேருந்தை பிடிக்க நெடுநேரம் டிப்போ சந்தியில் காத்திருக்க வேண்டும். அல்லது நடந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும்.
போட்டி போட்டு ஓடி, விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாக பேருந்தை செலுதத்தி மக்களை அள்ளி அள்ளி ஏற்றும் பேருந்துகள் ஈற்றில் மக்களை அவர்களை இறக்கிவிட வேண்டிய இடம்வரை போக்குவரத்தில் ஈடுபடாமல் நடுத்தெருவில் இறக்கி விடும் அநியாயத்தை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் தடுப்பாரா?
முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் போக்குவரத்தில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. பேருந்து வசதியின்மை, நீண்ட நேர இடைவெளி, காத்திருப்பது, நேர விரயம் என்று பயணம் செய்யும் மக்களை குறுகிய தூரம் பயணம் செய்யத் தயங்கி மக்களை நடுத்தெருவில் இறக்கி விடுவதால் அந்த மக்கள் இன்னுமின்னும் அசௌகரியத்தை அடைகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
