தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பின்தள்ளப்படும் துணுக்காய் – அம்பலப் பெருமாள் பகுதி! 

SAMSUNG CAMERA PICTURES

போர் நடைபெற்ற பகுதிகளில் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வது அவசியமானது. முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையிலே மிகவும் பின்தங்கிய மாவட்டம். போராலும் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம். இந்த மாவட்டத்திலேயே கைவிடப்பட்ட, பின்தங்கிய பல பகுதிகள் உண்டு. எந்த விதமான அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் அம்பலப்பெருமாள் பிரதேசத்திற்கு இடையிலான பகுதி காணப்படுகிறது.

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் அமைதிபுரம், அம்பளப்பெருமாள், கோட்டைகட்டியகுளம், தென்னியங்குளம், உயிலங்குளம், வேட்டையடைப்பு போன்ற பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் பெரும் அவலங்களின் மத்தியில் தமது வாழ்வைத் தொடர்கின்றனர். வறுமையான, விவசாயத்தை நம்பி வாழ்கின்ற மக்களே இந்தப் பிரதேசங்களில் வாழ்கின்றனர். இங்கு கவறுமையால் கல்வியை கைவிடுபவர்கள்தான் அதிகம்.

துணுக்காய் – அம்பலப்பெருமாள் பகுதி கடந்த முப்பது வருடங்களாக போரால் அபிவிருத்தியைக் காணாத பகுதி. இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக காணப்படுகிறது உருக்குலைந்துபோன துணுக்காய் – அம்பலப்பெருமாள் வீதி. இந்த வீதி குன்றும் குழியுமாக மிகவும் கடுமையாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதனால் இந்த வீதி ஊடான போக்குவரத்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஒரே ஒரு பேருந்தே பணியில் ஈடுபடுகிறது.

இப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும்பொருட்டு அடிப்படைத் தேவையான போக்குவரத்து இன்றி பெரும் சிரமப்படுகின்றனர். யானை அபாயம் கொண்ட .ந்த வீதியை மக்களின் போக்குவரத்துக்கு ஏற்ப சீர்படுத்தாதது ஏன்? இவ்வாறான பிரச்சினைகள் காரணமாக மாணவர்கள் கல்வியை கைவிடுதல், மரணங்கள் என பல விளைவுகள் உருவாகின்றன. இவைகளால்தான் இந்த மாவட்டம் மீண்டும் மீண்டும் பின்நோக்கித் தள்ளப்படுகின்றது.

உண்மையில் துணுக்காய் – அம்பலப்பெருமாள் வீதி ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வீதி. மல்லாவி, மன்னார், பூநகரி, வவுனியா போன் பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்துக்கு மிகவும் குறுகிய தூரம் கொண்டது இந்த வீதி. இந்த வீதியை செம்மைப்படுத்தினால் மிகவும் குறைவான நேரத்தில் குறித்த பகுதிகளுக்குச் செல்ல முடியும். போர்க்கால கட்டங்களில் – மிக நெருக்கடியான காலத்தில் இந்த வீதயை அண்டி மக்கள் வாழ்ந்ததும் போக்குவரத்து செய்தமையும் இங்கு குறிப்பிடலாம். ஆனால், தற்போது இந்த வீதியில் பேருந்துகள் வர அஞ்சுகின்றன. இதனை உரியவர்கள் கவனத்தில் எடுப்பார்களா?

போருக்குப் பின்னர் இந்தப் பகுதியிலேயே முதன் முதலில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டது. ஆனால் அபிவிருத்தி நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற பிரதேசமாக காட்சி அளிக்கிறது. இதேவேளை மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகளைப் பெறவும் முப்பது கிலோ மீற்றர் பயணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ள இந்த மக்கள் போக்குவரத்து வசதி இன்றி என்ன செய்வர்?

விவசாயம், அன்றாட கூலித் தொழில்கள் என மிகவும் வறிய நிலையில் உள்ள இந்த மக்கள் தமது அடிப்படை உரிமைகளான போக்குவரத்து, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட உரிமைகளைப் பெற முடியாத நிலையில் பின்தங்கிய வாழ்வை வாழ்ந்து கொண்டு மேலும் மேலும் பின் தள்ளப்படுகின்றனர். இந்த மக்களின் வாழ்வின் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்த இந்த வீதியை புனரமைப்பது மிகவும் அவசியமானது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Comments
Loading...