தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரகீத் எக்னெலிகொடவை கொலை செய்ய கூறியவர் விரைவில் கைது

Prageeth-Eknaliyagodaஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கொலை செய்யுமாறு உத்தரவிட்டதாக கருதப்படும் கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர், விரைவில் கைதுசெய்யப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரகீத் காணாமல் போனமை குறித்து ஏற்கனவே சுமார் 10 இராணுவ அதிகாரிகள் வரை கைதுசெய்யப்பட்டு விசாரணை நடத்திவரும் நிலையில், இதற்கு மூலகர்த்தாவாக செயற்பட்டவரை புலனாய்வு பிரிவினர் குறிவைத்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் அதியுயர் பதவியொன்றை வகித்துவந்த சிவில் அதிகாரியொருவரே இவ்வாறு கைதுசெய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரகீத் குறித்த விசாரணைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் மேலும் சில அதிகாரிகள் கைதுசெய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரகீத் காணாமல் போனமைக்கு இராணுவம் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை செய்யும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு இராணுவத்தால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரகீத் குறித்து இதுவரை இடம்பெற்ற விசாரணைகளில் அவர் கிரித்தலே இராணுவ முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், அங்கிருந்து வெலிக்கந்த இராணுவ முகாமிற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதோடு, குறித்த முகாம்களுக்கு நேரடியாகவும் சென்று விசாரணை நடத்தப்பட்டது.

அண்மைய தகவல்களின் படி பிரகீத் சேறுவில பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு முகாமில் ஒப்படைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு கடலில் வீசியெறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ஊடகவியலாளரும் கேலிச்சித்திர வரைஞருமான பிரகீத் எக்னெலிகொட, கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...