Designed by Iniyas LTD
பிரசவித்த தாய் பலி! உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை
புதுவை கொம்பாக்கத்தை சேர்ந்தவர் அச்சுதன். கார் டிரைவர். இவரது மனைவி சிவசங்கரி (வயது 30). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்துக்காக நேற்று முன்தினம் புதுவை அரசு ராஜீவ்காந்தி மகப்பேறு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாலையில் அவருக்கு குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் சிவசங்கரியின் உடல்நிலை மோசமானது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிவசங்கரி திடீரென இறந்து போனார். இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிவசங்கரிக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் அவர் இறந்துபோனதாக குற்றம் சாட்டினர்.
இதையடுத்து டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவசங்கரியின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆஸ்பத்திரி உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தியும் அதனை அவர்கள் ஏற்கவில்லை.
தொடர்ந்து ஆஸ்பத்திரி எதிரே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
மறியலில் ஈடுபட்ட சிவசங்கரியின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதை ஏற்று மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.