தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரதேச செயலரால் காணி அபகரிக்கும் முயற்சி குடும்பம் உண்ணாவிரதம்!

பல தசாப்தங்களாக குடியிருக்கும் காணியிலிருந்து தம்மை விரட்ட முற்படுவதாக தெரிவித்து கரைச்சி பிரதேச செயலரிற்கு எதிராக குடும்பமொன்று கிளிநொச்சியில்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்த போராட்டம் நேற்று புதன்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன் இடம்பெற்றது.
கிளிநொச்சி – ஆனந்தபுரத்தைச் சேர்ந்த முத்தையா விஜயநாதன் என்ற குடும்பத்தவர், மனைவி, சிறு குழந்தைகள் மற்றும் முதிய தாயார் ஆகியோருடன் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்..
கடந்த 1972 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியில் வசித்துவரும் தம்மை அங்கிருந்து வெளியேற்றி, குறித்த காணியை வேறுநபருக்கு வழங்குவதற்கு பிரதேச செயலாளர் முயற்சிப்பதாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தமது குடியிருப்பு காணிகளை கையகப்படுத்தும் வகையில் பிரதேச செயலர் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக குற்றஞ்சாட்டியுள்ள குடும்பத்தினர், பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதங்களையும் பதாகைகளில் காட்சிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் கரைச்சி பிரதேச செயலாளர் தெரிவிக்கையில், யுத்தத்திற்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் காணிப் பிணக்குகள் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக கரைச்சி பிரதேசத்தில் அதிகளவான காணிப் பிணக்குகள் ஏற்பட்டிருந்த நிலையில், அவை காணி அமைச்சின் நடமாடும் சேவைகள் மூலமாக தீர்த்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு நடமாடும் சேவைக்கு குறித்த நபரும் அழைக்கப்பட்டு, ஒரு பகுதி காணி வழங்குவதற்கு கிளிநொச்சி மாவட்ட செயலாளர் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், அவர் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், இந்திய வீட்டுத்திட்டத்தில்   இவருக்கு வீடு வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், அதையும் அவர் ஏற்க மறுத்ததாகவும் கூறினார்.
Comments
Loading...