Designed by Iniyas LTD
புனரமைக்கபடாத நிலையில் மன்னார் தொங்கு பாலம் – அழிவடையும் சுற்றுலா தலம்
சுற்றுலா தளமாக விளங்கி வரும் மன்னார் குஞ்சுக்குளம் தொங்குபாலம் அதன் விசேட தன்மையை இழந்து வருவதுடன் அழிவடையும் நிலையில் காணப்படுகின்றது. குறித்த பாலம் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாமல் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றது. இதனால் குறித்த பாலத்தை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் பாலத்தில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மன்னார் குஞ்சுக்குளம் தொங்குபாலம் பல வருட வரலாற்றினைக் கொண்டுள்ளது. மன்னாரின் பல்வேறு பகுதிகளிற்கு செல்லும் தமிழ், சிங்கள, முஸ்லிம் சுற்றுலாப்பயணிகள் தமது குடும்பத்தினருடன் குஞ்சுகுளம் தொங்குபாலத்திற்குச் சென்று அங்குள்ள இயற்கை அழகுகளைப்பார்வையிட்டு செல்கின்றமை வழமை.
இந்நிலையில் தொங்குபாலத்தில் நடப்பதற்காக அமைக்கப்பட்ட தகடுகள் நீண்டகாலமாக உடைந்து காணப்படுகின்றது. இதனால் அப்பாலத்தில் நடந்துசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் அருகே அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையம் பூட்டப்பட்டு, பணியாளர்கள் யாருமின்றி பராமரிப்பற்று காணப்படுவதனால் இளைப்பாற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இவ் சுற்றுலா மையமானது முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் 2014ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அமைக்கபட்டு 2016ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. எனவே பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள், மாணவர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிடும் இவ்வாறான சுற்றுலாத்தளங்களை பராமரிப்பதும், அழிந்து செல்லும் சுற்றுலா மையங்களை அழகுபடுத்தி மாகாணத்திற்கு வருமானத்தை பெறும் வண்ணம் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், அதன் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதும் இதற்கு பொறுப்பாகவுள்ள அதிகாரிகளின் கடமையாகும். என்று தெரிவிக்கும் சுற்றுலாப்பயணிகள் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர்.