Designed by Iniyas LTD
பெரம்பலூரில் குண்டு வெடிப்பு! மூதாட்டி படுகாயம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த நெய்க்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது 70). இவர் தனது மகன் சண்முகத்துடன் தனி வீட்டில் வசித்து வருகிறார். அரசு பள்ளி ஆசிரியரான சண்முகம் நேற்று காலை பணிக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் மாலை முத்தம்மாள் அப்பகுதியிலுள்ள ஒரு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ஒரு மரப்பெட்டியை முத்தம்மாளின் வீட்டின் முன்பிருந்த தாழ்வாரத்தில் வைத்து விட்டு சென்றனர்.
இதற்கிடையே ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி விட்டு முத்தம்மாள் மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது அங்கிருந்த மரப்பெட்டியை பார்த்ததும் அதனுள் என்ன இருக்கிறது? என ஆர்வத்துடன் முத்தம்மாள் திறந்து பார்த்தார். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் மரப்பெட்டியினுள் இருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முத்தம்மாள் உடல் கருகிய நிலையில் படுகாயமடைந்தார். மேலும் வெடிகுண்டு வெடித்ததில் கரும்புகை வெளியேறி அப்பகுதியை சூழ்ந்தது.
சத்தம் கேட்டதும் அருகிலிருந்தவர்கள் அலறியபடி ஓடிவந்து முத்தம்மாளை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா மற்றும் மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்ரிக் மேன்வல், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் சம்பவ இடத்திலிருந்த அந்த மரப்பெட்டியை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டு முன்பு வெடித்த குண்டு எந்த வகையானது?, அந்த வெடிகுண்டை வைத்து சென்ற மர்ம நபர்கள் யார்? அவர்கள் ஏன் முத்தம்மாளின் வீட்டு முன்பு வெடிகுண்டை வைத்து சென்றனர்? என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்த போது ஆசிரியர் சண்முகம் மற்றும் குடும்பத்தினர் வெளியில் சென்றிருந்ததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெடிகுண்டை வைத்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வெடிகுண்டு வெடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.