தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பொருளாதார நெருக்கடி; கிரீஸில் இன்று பொது வாக்கெடுப்பு

கிரீஸிக்கு கடனுதவி அளிக்க ஐரோப்பிய மத்திய வங்கி உள்ளிட்ட அமைப்புகள் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்பதா, வேண்டாமா என்று தீர்மானிக்க கிரீஸில் இன்று பொது வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

voteகடன் நெருக்கடியில் சிக்கித் தவித்த கிரீஸை மீட்பதற்கு ஐரோப்பிய கமிஷன், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் ஆகியவை நிபந்தனைகளின் அடிப்படையில் கடன் உதவி வழங்கியுள்ளன. கடன் உதவி வழங்குவது தொடர்பாக ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட உடன்பாட்டின் காலக்கெடு முடிவதற்குள் தொடர்ந்து நிதி உதவி பெறும் பொருட்டு புதிய உடன்பாடை எட்ட நடந்த பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.

இது குறித்து நாட்டு மக்களின் முடிவை அறிந்து கொள்ளும் வகையிலான பொதுவாக்கெடுப்பு ஜூலை 5ஆம் தேதி நடத்தப்படும் என்று சிப்ராஸ் அறிவித்தார். இதன் பின்னர் நிலைமை மேலும் சிக்கலானது.

உரிய நிதியைப் பெற முடியா காரணத்தால் சர்வதேச செலாவணி நிதியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த முடியாத நிலையில் தத்தளித்த கிரீஸிற்கு வழங்கி வந்த அவசர கால நிதி உதவியும் நிறுத்தப்பட்டது.

வங்கிகள் மூடப்பட்டன. பணப்பரிமாற்றத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பொது வாக்கெடுப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பேரணிகள் நடத்தப்பட்டன. இதனிடையே பொதுவாக்கெடுப்பிற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

 கடந்த ஜூன் 25ஆம் தேதி ஐரோப்பிய கமிஷன், சர்வதேச செலாவணி நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி முன்வைத்த நிபந்தனைகளுடன் கூடிய உடன்பாட்டை ஏற்க வேண்டும்? என்ற கேள்வி பொதுமக்களின் முன் வைக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் ஆம் அல்லது இல்லை என்று பதிலளிக்கும் வகையில் வாக்குச்சீட்டுகள் தயாராகி உள்ளன.

இல்லை என்று வாக்களிப்பதன் மூலம் கிரீஸ் மக்களுக்கு நன்மை பயக்கும் புதிய உடன்பாட்டை வலியுறுத்திப்பெற முடியும் என்கிறார் சிப்ராஸ். ஆனால் ஆம் என்று வாக்களிப்பதன் மூலமே யூரோ பிராந்தியத்தில் இணைந்திருப்பதோடு, வளர்ச்சியையும் பெற முடியும் என்கின்றன கடன் உதவி வழங்கிய அமைப்புகள். அரசிற்கு ஆதரவாக மக்கள் வாக்களிப்பார்கள் என்றும், அதன் பின்னர் புதிய உடன்பாடு எட்டப்பட்டு மூடப்பட்டுள்ள வங்கிகள் உடனடியாக திறக்கப்படும் என்றும் கிரீஸ் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடன் உதவி கிடைக்காமல் போனால் நாடு யூரோ பிராந்தியத்தை விட்டு வெளியேறும் நிலை உருவாகும் என்பதை மக்கள் உணர்ந்திருப்பதாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் தெரிவித்துள்ளார்.  சிப்ராஸின் எதிர்காலமும், கிரீஸின் எதிர்காலமும் தற்போது பொதுமக்களின் கையில்.

Comments
Loading...