தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மக்கள் போராட்டங்களின் வெளிப்பாடு தலைமைகளின் தோல்வியே!

17098616_1209585855815777_4573330823596001049_n

வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு புறம் நிலத்திற்கான போராட்டம். மறுபுறம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்கான போராட்டம். கேப்பாபுலவு மக்கள் 19ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி சிங்கள அரசின் விமானப்படைமுகாம் வாசலில் ஜனநாயக முறையில் துளியளவும் சோர்வின்றி அந்த மக்கள் உறுமிக் கொண்டிருக்கிறார்கள்.

இதைப்போலவே, கிளிநொச்சியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 28 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளின் புகைப்படங்களை காட்சிப்படுத்தி அதனைப் பார்த்து கண்ணீர் விட்டபடி இருக்கின்றனர். 28 நாட்களாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இருக்கும் மக்களை வடக்கு மாகாண முதல்வர் சந்தித்துள்ளார். முதல்வரின் காலைப் பிடித்து கண்ணீர் விட்டு அழுதனர் எம் உறவுகள்.

வடக்கில் நடைபெறும் போராட்டங்கள் தமிழ் தலைமையின் இணக்க அரசியலின் தோல்வியையே எடுத்துரைக்கிறது. இணக்க அரசியலின் மூலம் பேச்சுவார்த்தையின் மூலம் எங்கள் பிரச்சினையை தீர்க்க முடியுமெனில், எதற்காக மக்கள் வெயிலிலும் பனியிலும் போராட வேண்டும். மக்கள் களத்தில் போராட அழுத்தம் தாங்க முடியாத அரசு இணக்க அரசியின் சாதனையைப் போல தமிழ் தலைமையை அழைத்துப் பேசுகிறது.

சிங்கள அரசு விட்டுக்கொடுப்பு எதுவுமின்றி இன்னும் இறுக்கமான பிடியிலேயே இருக்கிறது. விட்டுக்கொடுக்காத, இறங்கி வராத அரசுடன் தமிழ் தலைமைகள் செய்வது இணக்க அரசியலா அல்லது சரணாகதி அரசியலா என்ற சந்தேகமும் இங்கேதான் எழுகிறது. சுதந்திரதினத்தில் கலந்துகொண்டு, போர் வெற்றி விழாவில் கலந்துகொண்டு செய்த இணக்க அரசியல் இப்போது ஐ.நாவுக்கு கால அவகாசம் வழங்கும் வரை வந்துவிட்டது.

தமிழ் மக்கள் எதற்காக தமிழ் தலைமையை தெரிவு செய்தனர் என்பதை மறந்துவிட்டார்களா? அல்லது தாம் தேர்தலில் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியைத்தான் மறந்துவிட்டார்களா? இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை, வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுயாட்சி தேர்தல் விஞ்ஞாபன சரத்துக்களை தமிழ் மக்கள் நினைவுபடுத்த வேண்டுமா? அல்லது நினைவுபடுத்தியும் எந்த பலனும் இல்லையா?

அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அவசர கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் நடைபெற்றது. ஈழத்தின் கூவத்தூர் என ஊடகங்கள் அக் கூட்டத்தை வர்ணித்தன. ஏனெனில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க எட்டு எம்பிக்கள் எதிர்த்திருந்தனர். அவர்களின் எதிர்ப்பை முடக்கி கால அவகாசம் வழங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்திற்கு முடங்கியவர்கள்தான் முன்னர் வீர உரை ஆற்றியிருந்தனர்.

வாக்களித்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்திற்கு அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்கினர் என்பது அவர்கள் எத்தகைய அரசியல்வாதிகள் என்பதை உணர்த்துகிறது. தமிழ் ஈழ மக்கள் போராட்டத்தின் மூலமே தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று வடக்கு முதல்வர் கேப்பாபுலவில் தெரிவித்திருந்தார். இதுவே தமிழ் மக்களின் இன்றைய தலைவிதியாக இருக்கிறது.

மக்கள் போராடித்தான் எல்லாவற்றையும் பெற வேண்டும் என்றால் எதற்கு இணக்க அரசியல்? எதற்கு தலைமைகள்? மக்களின் போராட்டத்திற்கு வலிமை உண்டு.அதுவே வீச்சும் எழுச்சியும் கொண்டது. உரிமைகளை வெல்ல உகந்த வழி அதுவே. எனவே மக்கள் போராட்டங்களை தமிழ் ஈழம் எங்கும் முன்னெடுத்து எழுச்சியை ஏற்படுத்தி எங்கள் உரிமைகளை வெல்வோம்.

ஆசிரியர்,
செண்பகம்.
19.03.2017

Comments
Loading...