Designed by Iniyas LTD
மன்னாரில் தொடரும் மக்கள் போராட்டம்…
மன்னார் சிலாவத்துறையில் நிலைகொண்டுள்ள ஶ்ரீலங்கா ஆக்கிரமிப்பு கடற்படையினரை அங்கிருந்து விலகி, தமது சொந்தக்காணிகளை விடுவிக்க கோரி இன்று (15) ஆர்ப்பாட்டப் போராட்டம் இடம்பெற்றது.
இன்று ஜும்மாத் தொழுகையின் பின்னர் சிலாபத்துறையில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இருந்து பல நூற்றுக்கணக்கான முஸ்ஸிம் மக்கள்,
பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கடற்படை முகாமை நோக்கி பேரணியாக சென்றுள்ளனர்.
மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி மாலை முதல் தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
பின்னர் சிலாபத்துறையில் 24 ஆவது நாளாக போராட்டம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற மக்கள் வீதிக்கு அருகில் நின்று கோக்ஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் பங்குத்தந்தை , உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மெசிடோ நிறுவனம், தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை போன்றவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.
கடந்த 1990இல் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் பேரினவாத சிங்கள படைகளிற்கும் இடையில் போர் இடம்பெற்ற போது வெளியேறிய மக்கள்,
2009 இல் சொந்த இடங்களிற்கு திரும்பியபோதும், கடற்படையினர் அங்கிருந்து வெளியேறவில்லை.
அப்பகுதியை சேர்ந்த சுமார் 218 வரையான குடும்பங்கள் அகதி வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்களின் 35 ஏக்கர் காணிகள் கடற்படையால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த காணிகளை விடுவித்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, கடற்படை முகாமிற்கு முன்பாக இன்றுடன் 24 ஆவது நாளாக தொடர் போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

