தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முதல் வெற்றியை ருசித்த பாக்கிஸ்தான்

20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.   pak-ami

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள மிர்புர் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.  இந்த நிலையில் நேற்றிரவு நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. பாகிஸ்தான் அணியில் வஹாப் ரியாஸ்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் அறிமுக வீரராக களம் கண்டார். ஐக்கிய அரபு அமீரக அணியில் சக்லைன் ஹெய்டெருக்கு பதிலாக உஸ்மான் முஸ்தாக் சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ ஜெயித்த ஐக்கிய அரபு அமீரக அணி கேப்டன் அம்ஜத் ஜாவித் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. பாகிஸ்தான் அணியின் அபார பந்து வீச்சில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹன் முஸ்தபா 1 ரன்னிலும், முகமது கலீம் 1 ரன்னிலும், முகமது ஷாசத் 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.   நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐக்கிய அரபு அமீரக அணி 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷைமான் அன்வர் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் அம்ஜத் ஜாவித் 27 ரன்னுடனும், முகமது நவீத் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அமிர், முகமது இர்பான் தலா 2 விக்கெட்டும், முகமது சமி, அப்ரிடி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை தோற்கடித்து முதல் வெற்றியை ருசித்தது. 4-வது விக்கெட்டுக்கு உமர் அக்மல் (50 ரன்), சோயிப் மாலிக் (63 ரன்) ஜோடி ஆட்டம் இழக்காமல் 114 ரன்கள் சேர்த்து புதிய சாதனை படைத்தது. இதற்கு முன்பு 2011-12-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்தின் இயான் மோர்கன்-பீட்டர்சன் ஜோடி ஆட்டம் இழக்காமல் 112 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது. ஐக்கிய அரபு அமீரக அணி கேப்டன் அம்ஜத் ஜாவித் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.   தொடர்ந்து 3-வது தோல்வியை சந்தித்த ஐக்கிய அரபு அமீரக அணி இறுதிப்போட்டி வாய்ப்பு இழந்து வெளியேறியது. 2 ஆட்டத்தில் ஆடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ள பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கிறது.

Comments
Loading...