Designed by Iniyas LTD
முருகன் , சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குக்கயிறு கிழிந்தது !!! – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த மரண தண்டனையை குறைக்க கோரி 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள்.
ஜனாதிபதி பதவிக்கு வந்தவர்கள் ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருணை மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த 13 ஆண்டுகளாக அந்த கருணை மனுக்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தன. இந்த நிலையில் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க தாமதம் ஏற்பட்டதாலும், கடந்த 23 ஆண்டுகளாக ஜெயிலில் இருப்பதாலும் தங்களது மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் உச்ச நீதிமன்றில் மனுதாக்கல் செய்தனர்.
அவர்கள் தங்கள் மனுவில், “ஏற்கனவே கருணை மனு மீது முடிவு எடுக்க தாமதம் ஏற்பட்டதால் 15 பேர் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நடைமுறையில் தங்கள் தண்டனையையும் குறைக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் 3 பேரின் மனுக்கள் மீதான விசாரணையை நடத்தியது. அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் குலாம் இ.வாகனவதி, சாந்தன், முருகன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார். ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவரது வாதத்தை ஏற்கவில்லை.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து இன்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மூன்று பேரின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
இந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியதை அறிந்த நிரபராதிகளின் உறவினர்கள் மற்றும் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன் பட்டாசு கொளுத்தியும், இனிப்பு வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.