Designed by Iniyas LTD
மைத்திரியின் யாழ் விஜயமும் – மக்களை அச்சுறுத்தும் படையினரும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம்செய்யவுள்ளதால் அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக கொழும்பிலிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைவாக யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் அச்சுவேலி காவல்துறை பிரிவுகளில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கொலைச் சதி வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக யாழ்ப்பாணத்தில் அவர் செல்லும் இடங்களை அண்டிய பிரதேசங்களில் குடியிருப்பாளர், நிறுவனங்களின் விவரங்களைச் சேகரிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 6 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும் கிராம சக்தி கலந்துரையாடலில் பங்கேற்கிறார். தொடர்ந்து அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்குச் செல்வார். அங்கிருந்து அச்சுவேலிப் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் இடம்பெறும் கிராம சக்தி திட்டம் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கிறார்.
இந்த நிலையில் ஜனாதிபதி செல்லும் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், அரச – தனியார் நிறுவனங்கள், பொது அமைப்புக்கள் மற்றும் வெளியிடங்களிலிருந்து வந்து செல்வோர் தொடர்பான விவரங்களை காவல்துறையினர் அவசர அவசரமாகத் திரட்டுகின்றனர்.
மேற்படி இடங்களில் உள்ள வீடுகள் , நிறுவனங்களுக்கு வியாழக்கிழமை காலை சிவில் உடைகளில் சென்றவர்கள் தம்மை காவல்துறையினர் என அடையாளப்படுத்தி , குடும்ப விவரங்களை கோரும் படிவங்களை உரிமையார்களிடம் கையளித்து அதனை நிரப்பித் தருமாறு கோரி படிவங்களை நிரப்பி எடுத்து சென்றுள்ளனர்.
இதவேளை, சில வீட்டு உரிமையாளர்கள் எதற்காக விவரங்களை கோருகின்றீர்கள் என கேட்ட போது, தமக்கு எதுவும் தெரியாது எனவும் கொழும்பில் இருந்து இந்த படிவம் வந்தது , அவர்களின் உத்தரவின் பேரில்தான் தாம் விவரங்களை கோருவதாக சிவில் உடையில் தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்திய நபர்கள் கூறியுள்ளனர்.
காவல்துறையினர் திடீரென சிவில் உடையில் குடும்ப விவரம் சேகரிப்பது மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டே இந்த பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
