Designed by Iniyas LTD
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மௌன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட சித்திரமும், வடிவமைப்பும் துறை மாணவர்கள் வாயில் கறுப்பு துணி அணிந்து மௌன போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று யாழ்.மருதனார் மடம் இராமநாதன் நுண்கலை பீடத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பல்கலைக்கழகத்தில் முதலாம் அரையாண்டிற்கான செயன்முறை பரீட்சையினை நடத்துமாறும், அரையாண்டிற்கான விரிவுரைகளை ஆரம்பிக்குமாறும், மாணவர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் வலியுறுத்தி மூன்று அம்ச கோரிக்கை பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்,
அவர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி கல்வி செயற்பாடுகளை விரைவில் நிறைவு செய்யுமாறு மாணவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
ஆனால் பல்கலைக்கழக நிர்வாகிகள் மாணவர்களின் பிரச்சினைகளை அசமந்த போக்கில் விட்டுவிட்ட நிலையிலேயே அவர்கள் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் கடந்த 16ம் திகதியும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் நிர்வாக குழுவினர் செவிசாய்க்காவிட்டால் போராட்டம் தொடரும் என மாணவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.