Designed by Iniyas LTD
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிப்பதற்கு மாணவர் ஒன்றியம் இணக்கம் …..
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை நாளை ஆரம்பிப்பதற்கு மாணவர் ஒன்றியம் இன்று இணக்கம் வெளியிட்டது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகியோரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி வழங்கிய உறுதிமொழியை அடுத்து இந்த இணக்கம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஒரு மாத காலமாக கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்தன.
எனினும் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியது.
இந் நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.
எனினும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகியோரை விடுவிக்கும் வரை கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கப் போவதாக மாணவர் ஒன்றியத்தினர் நிர்வாகத்துக்கு அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து மாணவர் ஒன்றிய உறுப்பினர்களை அழைத்து பல்கலைக்கழக நிர்வாகம் பேச்சு நடத்தியது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகியோருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான வழக்குகளிலிருந்து அவர்களை முழுமையாக விடுவிப்பது தொடர்பில் உயர் மட்டத்தரப்புகளுக்கு எழுத்துமூலக் கோரிக்கைகளை உடனடியாக அனுப்பப்படும் என்றும்,
உயர்மட்டத் தரப்புக்களை நேரடியாக சந்தித்து மூவரது விடுதலையை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் உறுதியளிக்கபப்ட்டுள்ள நிலையில் ,நாளை கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்க ஒத்துழைப்பதாக இணக்கம் தெரிவித்துள்ளனர்.