Designed by Iniyas LTD
யுத்த அனர்த்தத்தால் வடமாகாண கல்வியில் இன்றும் பின்னடைவு!
வட மாகாண கல்வியின் பின்னடைவிற்கு இன்றும் போரின் வடுவே முக்கிய காரணமாகவுள்ளது. என வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்தார்.
வட மாகாணத்தில் சாதனையீட்டிய மாணவர்களிற்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் லடார் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
வட மாகாண கல்வியின் பின்னடைவிற்கு இன்றும் போரின் வடுவே முக்கிய காரணமாகவுள்ளது. அத்துடன் பல குடும்பங்கள் பிள்ளைகளை சீராக்க பெரும் சிரமத்தினை எதிர் கொள்கின்றனர்.
இன்று வசதி படைத்த குடும்பங்களை விட மத்திய வர்க்க குடும்பத்தினர் தமது பிள்ளைகளை சீராக வளர்த்தெடுக்கின்றனர். அதேபோல் கீழ் மட்டத்திலே உள்ள குடும்பங்கள் குடும்ப சுமையின் காரணமாக பிள்ளைகளை சீராக வளர்த்தெடுப்பதில் தவறிவிடுகின்றனர்.
யாழில் உள்ள திருநெல்வேலி சந்தையானது ஓர் இருள் பிடித்த குகையாகவேயுள்ளது. இருப்பினும் அதற்குத்தான் அனைவரும் செல்லவேண்டியுள்ளது. இங்கு நாம் இவ்வளவுபேர் உள்ளபோதும் இச் சந்தையினை ஓர் நவீன சந்தையாக மாற்றமுடியவில்லை.
இருப்பினும் இந்த சந்தையில் தினமும் முதுகில் சுமை சுமந்து ஊதியம் பெறுபவனின் பணத்தில் குழந்தையின் கல்விக்கு எவ்வளவு செல்கின்றது. இவ்வாறு உடல் உழைப்பால் வியர்வை சிந்தியபணம் மூலம் பிள்ளைகளை சீராக்கி கவனிக்கப்படுகின்றதா? குழந்தையின் கவனிப்பிற்கு எவ்வளவு நேரத்தினை செலவிடுகின்றார். அவர்களின் குழந்தைகள் எவ்வளவு சிரமத்துடன் கற்கின்றனர்.
இவர்களையெல்லாம் சீராக்கவேண்டிய பணியே ஆசிரியர்பணி வட மாகாணத்தில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். ஆசிரியர்கள் தமது பணியினை தொழிலாக கொள்லாது சேவையாக கொள்ளல் வேண்டும்.
விரைவில் வடக்கில் நிறைவான ஆசிரியர்களை உருவாக்க நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். ஆசிரியர்களில் எவ்வளவுபேர் நிறைவான சேவையினை வழங்க ஆயத்தமாகவுள்ளனர்.
வடக்கில் உள்ள 15 ஆயிரம் ஆசிரியர்களும் உளவள பயிற்சியினை அறிந்திருக்க வேண்டும் அதற்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. என்றார்.