Designed by Iniyas LTD
வடக்கு மக்களுக்கு பொருத்து வீடுகளை திணிக்க முயலும் காரணம் என்ன!
வட மாகாண மக்கள் ஏற்காத பொருத்து வீட்டினை திணிக்க முயலும் காரணத்தைக் கூறவேண்டிய கடப்பாடு அமைச்சருக்கு உண்டு என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,
வட மாகாண மக்களும் கூட்டமைப்பும் ஏற்காத பொருத்து வீட்டினை திணிக்க முயலும் காரணத்தைக் கூறவேண்டிய கட்டடாய கடப்பாடு அமைச்சருக்கு உண்டு எம் மக்களிற்கு வீடு வேண்டும் என்பதனை நாம் மீண்டும் மீண்டும் கூறுகின்றோம். அது கல்வீடாக இருக்க வேண்டும் அதற்காக தொங்கிக் கொண்டிருக்கும் வீட்டினை நாம் ஏற்க மாட்டோம்.
பொருத்து வீடு தொடர்பில் தனிப்பட்ட விருப்பில் இருந்து அகன்று அதாவது சில்லறை அரசியல் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் அன்றி எமது மக்களிற்கான தேவையை அவர்களின் விருப்பத்திற்கேற்ப நிறைவு செய்ய முன்வரவேண்டும்.
மீள்குடியேற்ற அமைச்சரை எனக்கு 50 வருடமாகத் தெரியும் அவர் உணர வேண்டும் ஓர் ஆழ்ந்த ஆராச்சியின் பின்னர் தான் இத் திட்டம் எமது மக்களிற்கு பொருந்தாது என்று வட மாகாண சபை ஓர் முடிவை எடுத்தோம் என்பதனை உணரவேண்டும். அதற்கும் அப்பால் இதற்கு தற்போது கூறுவதும் ஓர் ஏற்றுக் கொள்ளமுடியாத விலை. இத் திட்டத்தினை தினிப்பதனால் எதிர் காலத்தில் சமுதாயப் பிரச்சணைகளும் ஏற்படும்.
இவ்வாறான நிலையில் இதை முன்னெடுக்க ஏன் முயற்சிக்கப்படுகின்றது என்பதே எனக்குப் புரியவில்லை. அதேநேரம் இத் திட்டத்தினை நாம் மட்டும் எதிர்க்கவில்லை அதற்கும் அப்பால் இத் திட்டத்திற்கு அரசிற்குள்ளும் எதிர்ப்பு உண்டு. அதேநேரம் எனக்கு ஞாபகம் உண்டு ஜனாதிபதியும் கூறினார் மக்கள் விரும்பாத எந்த திட்டத்தினையும் மக்கள் மீது திணிக்கக்கூடாது என.
எனவே எமது பிரதேச காலநிலை நிலைக்குப் பொருந்தாது இருக்கும் இத் திட்டமானது மலையக காலநிலைக்கு பொருந்தக்கூடும் . அவ்வாறு பொருந்தினால் அது தொடர்பில் மலையக தலைவர்களுடன் பேசவேண்டும். அவர்களின் விருப்பத்தை அறிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில் நான் எதிர்பார்க்கவில்லை ஓர் நாசகாரத் திட்டத்தினை அரசு எம்மீது திணிக்கும் என்று. நாம் தொடர்ந்தும் கூறுவோம் எமது மக்களிற்கு வீடு வேண்டும் அதற்கு பொருத்துவீடு உசிதமல்ல பொருத்தமான உசிதமான மாற்றுத் திட்டத்தினையே கண்டு பிடிக்க வேண்டும். என்றார்.