Designed by Iniyas LTD
வாழ்வா சாவா நிலையில் பெங்களூரு அணி!
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. பெங்களூரு அணி கடைசி லீக் ஆட்டத்தில் சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வி கண்டது. பெங்களூரு அணி அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் தனது எஞ்சிய 4 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.
இந்த ஆட்டம் பெங்களூரு அணிக்கு வாழ்வா-சாவா? போட்டியாகும். இதில் தோல்வி கண்டால் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழக்க நேரிடும். பெங்களூரு அணியின் பேட்டிங் வலுவாக இருந்தாலும், அந்த அணியின் பந்து வீச்சு பலவீனமாகவே இருந்து வருகிறது. அதனால் அந்த அணியால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
குஜராத் லயன்ஸ் அணி 11 ஆட்டத்தில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. 3 லீக் ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்த குஜராத் அணி கடைசி லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியது.
ஐ.பி.எல். போட்டியில் எல்லா ஆட்டங்களிலும் இடைவிடாமல் ஆடியவர் என்ற பெருமைக்குரிய சுரேஷ்ரெய்னாவின் மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார். இதனால் குஜராத் அணியின் கேப்டன் பொறுப்பை சுரேஷ்ரெய்னாவுக்கு பதிலாக பிரன்டன் மெக்கல்லம் கவனிப்பார் என்று தெரிகிறது.
முந்தைய லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி இருந்தது. அந்த உத்வேகத்தை இந்த ஆட்டத்திலும் தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க குஜராத் அணி முனைப்பு காட்டும். அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர பெங்களூரு அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.