தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விஜயகாந்திற்காக நஞ்சுண்ட மணியன்

மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து தே.மு. தி.க. தேர்தலை சந்திப்பதற்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தே.மு.தி.க. கொள்கை பரப்பு செயலாளராக இருந்த சந்திரகுமார் தனது ஆதரவாளர்களுடன் வெளியேறியுள்ளார்.maniyan

இன்று அவர் போட்டி கூட்டம் நடத்திய நிலையில் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் நெல்லை மாவட்டம் கடைய நல்லூர் குமாரபுரத்தைச் சேர்ந்த தே.மு.தி.க. பிரமுகர் மணியன் (38), கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

குமாரபுரம் 1–வது வார்டு செயலாளராக இருக்கும் அவர் திடீரென தே.மு.தி.க. அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவர் மக்கள் நலக் கூட்டணியுடன் தே.மு. தி.க. இணைந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தற்போது அமைக்கப்பட்டிருக்கும் இந்த கூட்டணி அப்படியே தி.மு.க. அணியில் போய் சேர வேண்டும் என்று கூறினார். இதற்கு அங்கு திரண்டிருந்த தே.மு.தி.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க.வின் கை கூலியாகவே மணியன் வந்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி தாக்கினர்.

அப்போது திடீரென மணியன் விஜயகாந்துக்காக தான் உயிரையே கொடுப்பேன் என்று கூறிக் கொண்டே மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதை தொடர்ந்து அங்கிருந்த சிலர் அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அப்போதும் தே.மு.தி.க. தொண்டர்கள் சிலர் மணியனை விரட்டி விரட்டி தாக்கினர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இன்று காலையில் கோயம்பேடு தே.மு.தி.க. அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments
Loading...