Designed by Iniyas LTD
ஸ்ரீ அரசு எழுந்தமனதாக மக்களை மீள் குடியமர்த்துகிறது! வட முதல்வர் விசனம்
வடக்கு மீள்குடியேற்ற செயலணியை மத்திய அரசு தானே உருவாக்கியமை வட மாகாண மக்களின் கருத்துக்களை உதாசீனம் செய்வதற்கு ஒப்பாகும். தம்மிடம் கேட்காமல் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் அரசாங்கம் வடக்கு மீள் குடியமர்வுக்காக உருவாக்கிய நல்லிணக்க செயலணி குறித்து உரையாற்றும் போதே வடமாகாண சபை முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவதுகடந்த 5 ஆம் திகதி மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் ரிஷாட் பதியுதீன் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகிய அமைச்சர்களைக் கொண்ட ஒரு செயலணி நியமிக்கப்பட்டது.
குறித்த செயலணியில் மத்திய அரசாங்க அலுவலர்கள் ஆறு பேரும் வட மாகாண பிரதம செயலாளரும் வடமேல் மாகாண பிரதம செயலாளரும் அங்கம் வகிக்க வேண்டும் என்றும் முடிவு எடுத்துள்ளனர்.
குறித்த செயலணியின் மீள்குடியேற்றம் பற்றிய நிகழ்ச்சி நிரலில் பாரம்பரிய சிங்கள கிராமங்களும் உள்ளடக்க வேண்டும் என்றும் திருகோணமலை மாவட்டமும் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த செயலணியில் மாவட்டச் செயலர்களை உள்ளீர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மாத்திரமல்ல இந்தியாவில் இருந்து வருபவர்களையும் அவர்களின் பாரம்பரிய இடங்களில் குடியமர்த்தாது தான்தோன்றித்தனமாக மத்திய அரசாங்கத்திற்கு உகந்த முறையில் அவர்களைக் குடியமர்த்தக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இந்தக் காரியத்தால் உருவாகியுள்ளது.
பெயருக்கு வட மாகாணசபை பிரதம செயலாளரை உள்ளடக்கி மத்திய அரசாங்கமே இவ்வாறான காரியங்களைக் முன்னெடுத்து செல்ல உத்தேசித்துள்ளது.
மத்திய அரசாங்கத்தின் உதாசீனமும் தான்தோன்றித்தனமும் கண்டனத்திற்குரியது. இன்று சர்வதேச மட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் சம்பந்தமாகப் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக பின்ஹெய்ரோ கோட்பாடுகளின் படி வெவ்வேறு காரணங்களினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது முன்னைய பாரம்பரிய இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மறுபக்கத்தில் மத்தியின் அதிகாரத்தை நிலைநாட்டுவதே குறிக்கோளாக இருந்து வருகின்றது.
செயலணியில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதை விட மத்திய அரசாங்கம் செயலணியை உருவாக்க முன்னர் வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்து இருக்க வேண்டும் என்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.