Designed by Iniyas LTD
ஸ்ரீ கடற்படையால் கைதான மீனவர்களை விடுவிக்ககோரி போராட்டம்!
ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஒவ்வொரு முறையும் மீன் பிடிக்க செல்லும்போது ஸ்ரீலங்கா கடற்படையால் சிறைபிடித்து செல்வதும், தாக்குதலுக்குள்ளாவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சி மடத்தை சேர்ந்த 28 மீனவர்களை நேற்று எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி ஸ்ரீலங்கா
கடற்படை சிறைபிடித்து சென்றது. பின்னர் அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களின் கைது ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து பாம்பனில் நேற்று இரவு நாட்டுப்படகு மீனவ சங்கங்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ராயப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கும் வரை நாட்டுப் படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும், கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கடலில் இறங்கி போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று ராமேசுவரம், பாம்பன், தங்கச்சி மடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடற்கரையில் 500 நாட்டுப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ராமேசுவரம் துறைமுகமும் களையிழந்து காணப்பட்டது. வேலை நிறுத்தம் காரணமாக மீன்களின் விலை உயரும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படை தாக்குதலால் மீனவர்கள் ஒவ்வொரு முறையும் பயந்து கொண்டு தான் கடலுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு கண்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.