தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்ரீலங்காவின் மரணச்சான்றிதழ்

Tamil woman cries as she holds up an image of her disappeared family member during the war against Liberation Tigers of Tamil Eelam at a protest in Jaffna

ஸ்ரீலங்கா அரசு இறுதி யுத்தத்தின்போது காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் கொடுக்கும் அநீதியான செயற்பாட்டில் மிகவும் ஈடுபாட்டுடனும் குற்ற உணர்வின்றியும் இறங்கியிருக்கிறது. ஸ்ரீலங்காவின் இன்றைய நல்லாட்சியைப் பொறுத்தவரையில் முன்னாள் அரச தலைவர் ராஜபக்ச இழைத்த அத்தனை நடவடிக்கைகளும் கொடுமையானவை. ஆனால் இந்தக் காணாமல் போனோர் ஆணைக்குழு போன்றவை இல்லாமல் போன இன நல்லிணக்கத்தை மீண்டும் கொண்டு வர முனைபவை. மிக விசித்திரம்தான்!

கடந்த சில நாட்களாக மைத்திரி – ரணில் அரசாங்கம் காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. ராஜபக்ச தொடங்கிய நடவடிக்கையை மைத்திரி அரசு தொடர்கிறது. மகிந்த ராஜபக்ச தன்னுடைய ஆட்சிக்காலத்தில் தன்னால் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு மரணச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளுமாறு வீடு வீடாக அதிகாரிகளை அனுப்பி கோரியிருந்தார். மக்கள் அதனை நிராகரித்திருந்தனர். எங்களுக்கு எங்கள் பிள்ளைகளின் உயிரே வேண்டும் என்றும் வேறு எதுவும் வேண்டாம் என்றும் குறிப்பிட்டனர்.

உயிர்களின் அருமை தெரியாது, உயிர்களை வேட்டையாடும் ராஜபக்சவுக்கு இந்த கோரிக்கை எப்பிடி புரியும்? ஆனால் இதனையே நல்லாட்சி அரசு என்று தன்னை அறிவிக்கும் ரணில் – மைத்திரி அரசும் செய்ய முனைகிறதா?

காணாமல் போனவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டு விட்டனர் என்று அண்மையில் ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறினார். அவர்கள் புலிகள் என்றும் அவர்கள் போரில் இல்லாமல் போய்விட்டனர் என்றும் அது அவர்களின் குடும்பத்தினருக்குத் தெரியும் என்றும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார். இந்த இடத்தில் இரு கேள்விகளை செண்பகப் பார்வை எழுப்ப விரும்புகிறது. காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என்றால் அதனை கோத்தபாய உள்ளிட்ட ராஜபக்சக்கள் அன்றைக்கு ஏன் அறிவிக்கவில்லை?

இரண்டாவது ராஜபக்ச அரசுகளும் சரி மைத்திரி அரசுகளும்சரி காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என்றால் ஏன் காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுக்களை நடத்துகின்றனர்? அதன் அமர்வுகளை நடத்துகின்றனர்? போரில் உறவுகளை காணாமல் போகக் கொடுத்த தமிழ் மக்களை ஏமாற்றவா? அல்லது இதனை குறித்து பேசும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றவா? காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்று எளிதாக இந்த விவகாரத்தை முடித்துக்கொள்ளாலாமா?

ஸ்ரீலங்கா அரசம் அதன் படைகளும் காணாமல் போனோரை வைத்து அரசியல் செய்யும் செயற்பாடுகளை யுத்தம் முடிவடைந்த காலத்திலிருந்து செய்து வருகின்றன. யுத்தம் முடிவடைந்தபோது யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட ராஜபக்சவின் அரசியல் காரியாலயம் ஒன்றில் மாம்பழச் சின்னத்தில் போட்டியிடும் ஒரு சிங்கள நபர் தன்னுடைய அலுவலகத்தில் வந்து மக்கள் பதிவு செய்தால் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரப்படும் என்று அறிவித்தார். இதனை அறிந்து மக்களும் திரள் திரளாக சென்று பதிவு செய்து தமது உறவுகள் வருவார்கள் என காத்திருந்தனர். ஆனால் வரவில்லை…

இதைப்போலவே கிளிநொச்சியில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகள் சிலருக்கு தொலைபேசியில் அழைத்து தாம் கேட்கும் பணத்துடன் கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயத்திற்கு வருபவர்களுக்கு உறவினர்கள் கையளிக்கப்படுவார்கள் என்று ஸ்ரீலங்கா இராணுவத்தினர் ஈடுபட்டு பின்னர் அந்த மோசடிச் செயல் அம்பலப்பட்டது. காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை வைத்து அவர்களின் உறவினர்களின் கண்ணீரை வைத்து பணம் பிடுங்க ஸ்ரீலங்கா அரச படைகள் முயன்றனர். தாமே காணாமல் போகச் செய்து தாமே அதில் பணம் பிடுங்க முயன்றனர்.

ஸ்ரீலங்கா அரசினதும் ஸ்ரீலங்கா அரச படைகளினதும் செயற்பாடுகளுக்கு இவை இரண்டும் தக்க உதாரணங்கள். அண்மையில் அமர்வுகளை யாழில் நடத்திய காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் அமர்வில் தலைவர் மாக்ஸ்வெல் பரணகம கருத்துத் தெரிவிக்கும்போது, இன்னுமா உங்கள் உறவுகள் உயிருடன் இருப்பார்கள் என்றும், மரணச் சான்றிதழையும் இழப்பீட்டையும் பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகளைப் பார்த்துக் கூறினார்.

இதற்குப் பதில் அளித்தவர்களும் பொதுவாக தமது கோரிக்கை முன்வைத்தவர்களும் ஒன்றை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட இராணுவத்திடன் சரணடைந்த எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் எமக்குத் தேவை? எமக்கு இழப்பீடு வேண்டாம். நீதியே வேண்டும். இவ்வாறு மிகவும் உறுதியாக தமது கோரிக்கைகளை அவர்கள் தெளிவாக முன்வைத்துள்ளனர். காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகள் பல்வேறு தரப்பினரின் மத்தியிலும் தமது போராட்டத்தின் நோக்கத்தை மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் முன்வைத்துள்ளனர்.

காணாமல் போகச் செய்யப்பட்டோர் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் இதுவரையில் அதிகாரபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை. காணாமல் போகச் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் உயிருடன் இல்லை என்று அண்மையில் இலங்கை பிரதமர் கூறிய கருத்தில் சிலர் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தும் தொக்கி நிக்கிறது. அவர்கள் யார்? அவர்களுக்கும் ஸ்ரீலங்கா அரசு மரணச் சான்றிதழ் கொடுக்க போகிறதா? மற்றவர்களுக்கு என்ன நடந்தது? இவைகளுக்கு ஒரு அரசு என்ற வகையில் இந்த உலக்திற்கு பதில் அளிக்க வேண்டிய தேவை ஸ்ரீலங்காவுக்கு உண்டு.

அதனை விடுத்து காணாமல் போனவர்கள் குறித்து பொறுப்புக் கூறாமல் இந்த விடயத்தை மூடி மறைக்கும் விதமாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகளை மௌனிக்கச் செய்யும் விதமாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுப்பது என்பது ஸ்ரீலங்கா அரசு தனக்குத்தானே மரணச்சான்றிதழ் கொடுப்பதற்கு ஒப்பானது. அத்தகைய அரசியல் விளைவுகளை அது உண்டு பண்ணும் என்பது எச்சரிக்கைக்குரியது.

காணாமல் போகச் செய்யப்பட்டமை, அல்லது இத்தனை வருடங்களாக காணாமல் போகச் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை, அல்லது தடுத்து வைத்து நிந்தித்தமை மிகப் பெரும் குற்றச் செயல்களாகும். இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா தான் இழைத்த குற்றம் எதுவென்றும் அதனுடன் தொடடர்புடைய பொறுப்புடையவர்கள் தண்டிக்கப்படுவதும் இதனை வெளிப்படைத் தன்மையோடு அணுகுவதுமே காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதியை வழங்கும்.

அதன் ஊடாகவே மாபெரும் கண்ணீரை துடைக்க இயலும்!

ஆசிரியர்,
செண்பகம்,
16.02.2016

Comments
Loading...