தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அதிகளவு முறைப்பாடு புலிகளுக்குஎதிராகவே குற்றம் சுமத்தியது சிறீலங்கா ஆணைக்குழு

images

காணாமல் போதல்கள் தொடர்பிலான சிறீலங்கா ஜனாதிபதியின் ஆணைக்குழுவிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 80 வீதமானவை புலிகளுக்கு எதிரானவை என  சிறீலங்கா ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வடக்கைச் சேர்ந்த பெரும்பான்மையானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளே கடத்தல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியுள்ளதாக சிறீலங்கா ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சிறீலங்கா அரசாங்கப் படையினருக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுத்தும் நோக்கில் புலிகள் சிறுவர்களை படையில் இணைத்துக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணமல் போனோர் தொடர்பான விசாரணையில் அதிகளவான முறைப்பாடுகள் சிறீலங்கா படைகளுக்கு எதிராகவே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சாட்சிப்பதிவுகளில் சிறீலங்கா படைகளுக்கு எதிரான சாட்சியங்களாக சாவகச்சேரியில் வயோதிபர் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.அவர் தெரிவிக்கும் போது.

கொமாண்டர் துமிந்த தலைமையில் 3000 படைகளுக்கு மேல் சுற்றிவளைப்பில் ஈடுபட்டு பல தமிழர்களை கைது செய்துகொண்டு சென்றனர். அதில் பலர் இன்றுவரை எங்கு சென்றார்கள் என்பதே தெரியவில்லைஎனசாட்சியமளித்துள்ளார்.

இதேவேளை 1996 ஆம் ஆண்டு நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற பாரிய சுற்றிவளைப்பின் போது படையினரால் கைது செய்யப்பட்டபின்பு காணாமல் போன தனது கணவனை மீட்டுத்தருமாறு குடும்பப் பெண்னொருவரும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசாரணையில் சாட்சியமளித்தவர் சிறீலங்கா படைகள் .கருணாகுழு, ஈ.பிடி.பி வெள்ளைவானில் வந்தவர்களினாலும் தமது பிள்ளைகள் கடத்தப்பட்டதாகவும் அதன்பின்பு அவர்கள் காணாமல் போனதாகவும் சாட்சியமளித்தனர்.

அதேவேளை இறுதியுத்தத்தின் போது முள்ளவாய்க்கால் வட்டுவாகல் ஆகிய பகுதிகளில் விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் பல ஆயிரக்கணக்கான போராளிகள்.பொதுமக்கள் எனப்பலர் சிங்கள படைகளால் கைதுசெய்யப்பட்டதாகவும். விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் போராளிகள் தாங்களாக வந்து சரணடைந்தால் தண்டனையில்லை எனவும் விசாரணையின் பின்விடுதலை செய்யப்படுவீர்கள் என்று படையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததாகவும் சிங்கள படைகளின் இந்த அறிவிப்பினை நம்பி விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் சரணடைந்ததாகவும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்தனர்.

அத்துடன் வயோதிபத்தாய் ஒருவர் சாட்சியமளித்த போது வெள்ளை வேனில் கடத்தப்பட்ட தனது மகன் படையினரின் உந்துருளிக் குழு சீருடையில் ஏற்றிச் சென்றதை தான் கண்டதாக ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்து உண்மையை அம்பலப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இன்னொரு சாட்சியத்தில்   “2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ஆம் திகதி அதிகாலை 03.45 மணியளவில் என்னுடைய வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்த சிங்களப்படைகளும்  ஈ.பி.டி.பி அமைப்பின் சில உறுப்பினர்களும் எனது மகனான ஜெயராஜை அடித்து துன்புறுத்தியதுடன் எங்களையும் அச்சுறுத்தினர்.

அதன் பின்னர் அவர்கள் என்னுடைய மகனை அழைத்துக் கொண்டு சென்றிருந்தனர். ஆனால் தற்பொழுது வரை எனது மகன் தொடர்பாக எந்தவொரு தகவலையும் என்னால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு என்னுடைய மகன் வேண்டும். அவரை மீட்டுத் தாருங்கள்”

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் யோகரத்தினம் யோகியின் மனைவி வழங்கிய சாட்சியத்தில்“எனது கணவர் யோகரத்தினம் யோகி இறுதி மோதல்களின் இறுதி நாளான மே 18. 2009.ல் வட்டுவாகல் பகுதியில் வைத்து அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் முன்னிலையில் படைகளிடம் சரணடைந்தார்.

என்னுடைய கணவருடன் நூற்றுக்கும் அதிகமான விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் படையினரால் பேரூந்தொன்றில் ஏற்றிச் செல்லப்பட்டனர். அதனை நானும் பெருமளவான மக்களும் நேரில் பார்த்துக் கொண்டிருந்தோம் என அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான ஒரு நிலையில் காணாமல் போதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 80 வீதமானவை புலிகளுக்கு எதிரானவை என அந்த ஆணைக்குழு குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்க ஒரு விடயமே!

Comments
Loading...