தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பறிக்கப்பட்ட தமிழக வீரரின் பதக்கம் ….

தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டம் செக்கூரணியை சேர்ந்தவர் லட்சுமணன்.  சிறு வயதிலேயே தந்தையை இழந்து வறுமையின் பிடியில் சிக்கி தவித்த லட்சுமணன், தேசிய அளவில் 5,000 மற்றும்  10,000 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் சாதனை படைத்து ராணுவத்தில் பணியில் சேர்ந்தார்.

2015-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள போட்டியின் 5,000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும், 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலத்தையும் கைப்பற்றினார்.

தொடர்ந்து 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் 5000, 10,000 மீட்டர் ஓட்டத்தில் இரண்டிலும் தங்கம் வென்ற லட்சுமணன், உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

இந்நிலையில், ஆசிய விளையாட்டு தடகள போட்டியில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்கள் என எதிர்பார்க்கப்பட்டவர்களில் ஒருவராக பங்கேற்ற லட்சுமணன் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-ம் இடம்பிடித்தார்.

பந்தய இலக்கை 29 நிமிடம், 44.91 விநாடிகளில் கடந்து வெண்கலம் வென்ற லட்சுமணனின் மகிழ்ச்சி, நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

ஏனெனில் 10,000 மீட்டர் ஓட்டத்தில், முதலில் வந்த பஹ்ரைன் வீரர் ஹசன்-ஐ முந்திச் செல்ல முற்பட்ட போது, ஓடுதளத்தை விட்டு விலகிச் சென்றதாக ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு கூறியது.

இதனால், தகுதிநீக்கம் செய்யப்பட்டு அவரிடம் இருத்த  வெண்கலப் பதக்கத்தையும் பறித்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய தடகள கூட்டமைப்பு மேல்முறையீடு செய்தும், ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு அதை ஏற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லட்சுமணன், பல லட்சம் மக்களின் இதயங்களை வென்று விட்டதாகவும், அவர் ஒரு சாம்பியன் என்றும் இந்திய தடகள கூட்டமைப்பு டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.

இதேவேளை இதற்கு முன், 1986 ஆசியப் போட்டியின் 800 மீட்டர் ஓட்டத்தில், இந்திய வீராங்கனை ஷைனி வில்சன் தடம் மாறி ஓடியதால், பதக்கத்தை இழந்தமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...